Saturday, 29 June 2013


மனித வாழ்வின் இரகசியம்

இயற்கையின் மாபெரும் உண்மை


       இப்பிரபஞ்சத்தின் ஒரே சீரான வெளிப்பாடுகளும் இன்னும் கட்டமைப்புடன் நடைப்பெற்றுவரும் அதன் இயல்பான இயக்கங்களும் ஒரு மாபெரும் உண்மையை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அது யாதெனில், இந்த உலகத்தையும் இதிலுள்ள படைப்பினங்களையும், இன்னும் அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்தவன்... இவற்றைச் சீராக நிர்வகித்து வருபவன்... ஏக வல்லவனாகிய இறைவன் ஒருவன் மட்டுமே! அவன் தன் உள்ளமையிலும், பண்புகளிலும் தனித்தவன்.

    அவன் எங்கும் நீக்கமறநிறைந்து இருக்கிறான். அனைத்தையும் ஆக்கி அழிக்க சக்தி படைத்தவல்லவன். எல்லாவற்றையும் பார்க்கிறான், மனதில் ஏற்படும் எண்ணங்களையும், ஏக்கங்களையும் கூட கேட்கிறான். அகிலமெங்கும் ஓர் இலை கூட அவனது அறியுதல் அனுமதியின்றி உதிரமுடியாது. 

    தெளிவான உள்ளத்துடன் சிந்தித்து பார்க்கும் ஒவ்வொரு மனிதனாலும் இதனை உணர்ந்து கொள்ள முடியும். அவர் எம்மதத்தை ஏற்றிருக்கக் கூடியவராயினும் சரி, எந்த சிலையை, கடவுளை வணங்குபவராயினும் சரி. அவர் தனது மனசாட்சியின் உணர்வால் தன்னை படைத்து பரிபாலிக்கும் இரட்சகன், அசல் எஜமானன் அவன் ஒருவனே என்று அவர் உள்ளம் கூறுவதை நம்புகிறார். மனித அறிவின் மூலமும், நியாயமாக சிந்தித்தலினாலும் இந்த உண்மையையே உணருகிறார். ஆகவே முழு பிரபஞ்சத்தின் ஏக அதிபதி ஒருவனே என்பதைத் தவிர வேறு எண்ணம் மனிதர்களின் உள்ளத்தில் வருவதில்லை.

   ஏனெனில் ஒரு பள்ளிக்கூடத்திற்கு இரண்டு முதல்வர் இருந்தால், அப்பள்ளிக்கூடம் சீராக, சிக்கல் இல்லாமல் இயங்க முடியாது. ஓர் ஊருக்கு இரண்டு தலைவர்கள் இருந்தால் ஊர் நிர்வாகம் சீர்குலைந்து விடும், ஒரு நாட்டிற்கு இரண்டு ஆட்சியாளர்கள் இருக்க முடியாது எனும் போது, இவ்வளவு பெரிய உலகத்தின் நிர்வாகம் ஒன்றுக்கும் அதிகமான கடவுள்கள் அல்லது எஜமானர்கள் மூலம் எப்படி சுமூகமாக இயங்க முடியும்? மேலும் இப்பிரபஞ்சத்தின் நிர்வாகிகளாக பல பேர்கள் இருந்து இதனை எப்படி சுமூகமாக இயக்க முடியும்...?

      “அல்லாஹ்வைத் தவிர வானம், பூமியில் அநேக கடவுள்கள்(எஜமானர்கள்) இருந்துகொண்டிருந்தால் பெரும் குழப்பங்கள் விளைந்திடும்” (அல் குர்ஆன்-21:22) இது திருக்குர்ஆனின் அறிவிப்பாகும். எப்படியெல்லாம் குழப்பம் ஏற்படும் என்பதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு.

ஆய்வு ரீதியான ஒர் உதாரணம்

   மழைக்கு சொந்தக்காரனாக கருதப்படும் வருணபகவான் பூமியின் ஓரிடத்தில் மழையை பொழியச் செய்ய விரும்புகிறார். பூமிக்குச் சொந்தம் கொண்டாடும் பூமா தேவி அந்த இடத்தில் இப்போது மழைவேண்டாம் என்று தடுக்கிறார். இது போன்ற சூழ்நிலையில் என்ன நடக்கும். இரண்டு கடவுள்களும் மோதிக்கொள்வார்கள். இவ்விரு கடவுளர்களின் மோதலினால் பூமியிலும், அதிலுள்ள மனிதர்கள் உட்பட அனைவரிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டுவிடாதா? அது போன்றே கல்விக்கென்று தனிதெய்வமும், செல்வத்திற்கென்று ஒரு தெய்வமும் இவ்வாறு ஒவ்வொரு துறைக்கும் வெவ்வேறு தெய்வங்களாக ஆக்கப்பட்டிருப்பதும் குழப்பத்திற்கே வழிவகுக்கும். ஏனெனில் தன்னை மதித்து வணங்குபவர்களுக்கு உயர்வைத் தருவதையே அந்த அந்த கடவுளர்கள் விரும்புவார்கள். இந்த அடிப்படையில் எல்லா கடவுள்களும் செயல்படும் போது உலகில் போட்டா போட்டி ஏற்படும் அதன் விளைவு குழப்பமாகத்தான் முடிவுரும்.


சத்திய சாட்சி

   உண்மை யாதெனில், உலகின் அனைத்து பொருட்களும் ஒரு கட்டமைப்புடன் சீரான முறையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதுவே பிரபஞ்சத்தின் அமைப்பாகும், ஏனெனில் இப்பிரபஞ்சத்தின் அதிபதி ஒருவனே அவன் தனித்தவன். அவன் எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஆக்கவும், அழிக்கவும் வல்லமை பெற்றவன். 

     அவனை நமது கற்பனைகளினால், எண்ணங்களினால் இப்படிப்பட்டவன் தான் என்று நிர்ணயப்படுத்த முடியாது. அவனுக்கு நாமாக ஒரு உருவமும், தோற்றமும் கற்பிக்க முடியாது. அந்த இறைவனே அகிலங்கள் அனைத்தையும் படைத்திருக்கிறான் மேலும் அவைகளை மனிதர்களின் சேவைக்காகவே படைத்துள்ளான்.(அல்குர்ஆன் 2:29)

     சூரியன் – மனிதனுக்கு சேவகன். காற்று – மனிதனுக்கு ஊழியன். இந்த பூமியும் இதிலுள்ளவைகளும் மனிதனுக்கு உதவி பணி செய்வதற்கே ஆகும். இவ்உலகிலுள்ள உயிருள்ளவையும், உயிரற்றவையும் மனிதனின் பயன்பாட்டுக்காகவும் ஊழியத்திற்காகவும் மட்டுமே படைக்கப்பட்டுள்ளன.

    நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவை அனைத்தும் மனிதனின் வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டே இருக்கின்றன. இவைகளை அனுபவிப்பதற்காக படைக்கப்பட்டுள்ள மனிதன் இந்த எல்லாவற்றின் தலைவனாகவும் ஆக்கப்பட்டுள்ளான். ஆதலால் மனிதர்கள் அந்த இறைவனின் அடியார்களாக வாழ வேண்டும் என்பதும், அது போன்றே அவனை வணங்கவும், அவனது உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டுவாழவும் வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். நீதி என்னவென்றால், படைத்தவன் – வாழ்வளிப்பவன் – உணவு, நீர் கொடுப்பவன், வாழ்வின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிவைப்பவன், மரணிக்கச்செய்பவன் அந்த ஒரே ஒரு இறைவன் தான். ஆகவே அந்த எஜமானனின் உத்தரவுக்கும் திருப்திக்கும் ஏற்ப அவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதும் தனது வாழ்விலும் இன்னும் வாழ்க்கைத் தொடர்பிலான அனைத்து விஷயங்களிலும் அவனது திருப்பொருத்தத்திற்கு ஏற்பநடப்பது தான் ஓர் உண்மை மனிதனின் கடமையாகும். ஆகவே தனது வாழ்வை அந்த ஏக அதிபதியின் ஆணைக்குக் கட்டுப்பட்டு கழிக்காத ஒருவன் உண்மையான “மனிதன்” என்று சொல்லப்படுவதற்கே அருகதையற்றவன். என்றால் அது மிகையானதல்ல.

      ஆகவே மனிதன் அந்த ஏக இறைவனின் அடிமையாக வாழ்வது எப்படி? அதற்கான வழிமுறை நியதிகள் என்ன? எவ்வாறான முறைகளில் வணங்கினால் அவன் நமது வணக்கங்களை ஏற்றுக்கொள்வான்? இவ்வாறான கேள்விகள் நம் உள்ளத்தில் ஏற்படுவது இயல்பானதாகும். இதற்கான வழிகாட்டல்கள் இறைவன் தன் புறத்தில் இருந்தே நமக்கு அருட்புறிந்தால் மட்டுமே தெளிவைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே அத்தகைய வழிகாட்டல்களே இறை வேதங்கள் என்று அழைக்கப் படுகின்றன. அந்த வேத வழிகாட்டல்களை இறைவனிடமிருந்து பெற்று வாழ்வியலில் நடைமுறைப்படுத்தி போதிப்பவர்களை “நபி – ரசூல்”மார்கள் என்று கூறப்படும். வேதம் இறைவனால் அருளப்பட்டதற்கு ஆதாரம்.

ஓர் ஆதாரம்

    இறைமறை “குர்ஆன்” உலகமக்கள் அனைவருக்கும் சத்தியத்தை எடுத்துரைப்பதற்காக ஏக இறைவனால் இறக்கிவைக்கப்பட்டதாகும். இந்த திருமறை குர்ஆன் இறைவனின் சத்திய வேதமே ஆகும். இதில் உங்களுக்கு ஐயமிருந்தால் அதில் உள்ளது போன்ற ஓர் (சிறிய) அத்தியாயத்தையேனும் தொகுத்துக் காட்டுங்கள்...! (குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது அல்ல என்று வாதம் செய்வதில்) “நீங்கள் உண்மையாளர்களானால் இதற்காக இறைவனைத் தவிர அனைத்துலகத்தவர்களையும், உதவிக்காக அழைத்துக் கொள்ளுங்கள்” (பார்க்கலாம்) (குர்ஆன்-2:23) என்று சவால் விட்டுக்கொண்டிருக்கிறது.

      ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக இன்று வரை உலகிலுள்ள மனிதர்கள், அறிவியல் வல்லுனர்கள், நவீன கருவியான கணினிகளைக்கையாளும் அறிஞர்கள் ஆகியோர் இதற்காக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு களைத்து விட்டனர். இவர்கள் அனைவரும் சோர்ந்து தலை குனிந்து விட்டனரே தவிர, இது இறைவேதமல்ல என்று யாராலும் நிரூபிக்க முடியவில்லை. இந்த அறிவிப்பின் மூலம் நமது அறிவுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் திருக்குர்ஆன் இறைவேதம் தான் என்பதற்கு அதன் அபூர்வமான தெய்வீக அமைப்பையே இறைவன் முன் நிலைப்படுத்துகிறான். இச்சிறப்பம்சத்தையே ஆதாரமாகவும் ஆக்கியுள்ளான். திருக்குர்ஆன் இறைவேதம் அல்ல என்றால் அது போன்ற ஒரு சிறிய அத்தியாயத்தையாவது கொண்டு வந்து நிரூபிக்கும் படியும் பொது அறிவிப்பு செய்துள்ள அன்றைய காலம் தொட்டு இன்று வரையுள்ள உலகமக்களின் இயலாமையை முன்வைத்தே குர்ஆன் தன்னால் அருளப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறான். இவ்வாறு குர்ஆன் இறைவனின் வேதம் தான் என்று உறுதி படுத்தப்பட்டபின் அதன் அறிவிப்புகள் அனைத்தும் தெய்வீகமானவைகளாகவும் சந்தேகத்திற்கிடமின்றி உண்மையானவைகளாகவுமே இருக்கமுடியும்.

ஒரு மாபெரும் சத்தியம்

     அந்த ஏக இறைவன், தனது சத்திய வேதம் திருமறையில் நமக்கு ஒரு தெளிவான உண்மையை எடுத்துக் கூறியுள்ளான். “ஒவ்வொரு (உயிருள்ள) ஆன்மாவும், மரணத்தை ருசித்தே தீர வேண்டும். அதன் பிறகு நீங்கள் நம்மிடம் தான் திரும்பி வர நேரிடும்” (அல்குர்ஆன்-29:57)

    இவ்வசனத்தில் இரு பகுதிகள் உள்ளன: முதலாவது - ஒவ்வொரு உயிருள்ளவையும், மரணத்தை அனுபவித்தே ஆக வேண்டும். இந்த கருத்தை எல்லா சமயத்தினரும், எல்லா துறையினரும், எல்லா நாட்டினரும், எல்லா காலத்தவரும் ஏற்றுள்ளனர். இன்னும் சொல்லப்போனால் மதத்தை ஏற்காதவரும் கூட இந்த உண்மையை ஏற்கிறார்கள். மிருகங்கள் (வரையிலும்) கூட மரணத்தின் உண்மையை உணர்ந்திருக்கின்றன. எலி, பூனையைக் கண்டு ஓடுகிறது. நாயும் கூட பாதையில் விரைந்து வரும் வண்டியைப் பார்த்து ஓடி விடுகிறது. ஏனெனில் அவற்றிற்கும் மரணத்தின் மீது பயமும் நம்பிக்கையும் உண்டு.

மரணத்திற்குப் பின்

   இவ்வசனத்தின் இரண்டாம் பகுதியில், திருமறை ஒரு மாபெரும் உண்மையின்பால் நம் கவனத்தை திருப்புகிறது. அந்த உண்மை மனிதனுக்குப் புரிந்துவிட்டால், முழு உலகின் சூழ்நிலையே மாறிவிடும். “நீங்கள் மரணத்திற்குப்பின் என்னிடமே திரும்பி வருவீர்கள். அதன் உட்கருத்து இவ்வுலகில் எப்படி செயல்பட்டிருந்தீர்களோ அதற்கேற்ப பிரதி பலன்களை, (உங்களை உலகில் வாழ்வதற்காக படைத்து அனுப்பி வைத்த) என்னிடமிருந்து பெறுவீர்கள்” என்பது தான் அந்த உண்மை.
     
     மரணமடைந்தபின் நமது உடல் அழுகி மண்ணில் மக்கிப்போய் விடும். அல்லது தீயில் எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்படும். பிறகு மீண்டும் எழுப்பப்பட மாட்டோம் என்று நமக்கு நாமே எண்ணிக்கொள்வதற்கு எவ்வித உறுதிபாடும் இல்லை. அவ்வாரே மரணத்திற்குப்பின் மனிதர்களின் உயிர் வேறொரு உடலில் புகுந்துகொள்ளும் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இல்லை. இவ்வாரான கண்ணோட்டங்கள் மனித அறிவின் உரைகல்லில் உரசிப்பார்த்து உறுதிப்படுத்தவோ சரிகாணவோ முடியாதவைகளாகும்.

     முதலாவதாக இந்த உலகில் இறந்துவிட்ட மனிதன் இறப்புக்குப்பின் அவனது பாவங்களுக்கு ஏற்ப பல் வேறுபட்ட உயிரினங்களாக தோற்றம் பெறுகிறான் என்னும் மறுபிறவிக் கொள்கை எந்த வேதங்களிலும் இடம் பெறவில்லை. பிற்கால மதபுராணங்களில், கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும் மனிதனின் இயற்கை “ஜீன்” என்னும் மூலக்கூறுகள் அவர்களின் குழந்தைகளில் பதியப்பட்டு சந்ததிகளின் தோற்றங்களிலும், பண்புகளிலும் வெளிப்படுகின்றன. பெற்றோர்களிடமிருந்து மகனுக்கும், மகனிடமிருந்து அவனது மகனுக்கும் மாறிமாறி வருகிறது என்பது தான் விஞ்ஞானப்பூர்வமாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

       ஆனால் மறுபிறப்பு என்ற இக்கண்ணோட்டம், மதத்தின் பெயரால் மக்களை மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற பிரிவினையை ஏற்படுத்தவே பயன்படக்கூடியதாக ஆக்கப்பட்டுள்ளது. மதத்தின் பெயரால், சூத்திரர்களிடம் வேலை வாங்கவும், அவர்களை மட்டமாகக் கருதச் செய்திடவும் மதக் குத்தகைதாரர்கள் செய்த சூழ்ச்சியாகவே இது இருந்து வருகிறது. சமூகத்தின் ஒடுக்கப்பட்டசாரார் “எம்மைப் படைத்த இறைவன் எல்லா மனிதர்களுக்கும் கண், காது, மூக்கு எல்லாவற்றையும் சரி சமமாகப் படைத்துள்ள போது, நீங்கள் உங்களை உயர் ஜாதியாகவும், எங்களை கீழ் ஜாதியாகவும் எப்படி ஆக்கினீர்கள்?” என்று வினா தொடுக்கும் போது அவர்களை நம்பவைப்பதற்காக மறுபிறவிக் கொள்கையை சாக்காகக்காட்டி “உங்களின் முந்தைய வாழ்வின் செயல்கள் உங்களை கீழ்த்தரமான ஜாதியாக ஆக்கிவிட்டது” என்று கூறி அவர்களை நம்பவும் செய்துவிட்டார்கள்.

         இந்த கண்ணோட்டத்தில், மனித உயிர்கள் அனைத்தும் தங்கள் பாவச் செயல்களுக்கு ஏற்ப மீண்டும் மறுபிறவியில் கீழ் ஜாதியாகவோ அல்லது வேறு படைப்பாகவோ பிறக்கின்றன. தம் செயல்களுக்கேற்ப வெவ்வேறு உருவங்களாகமாறி இவ்உலகுக்கு வருகின்றன. மிக மோசமான செயல் புரிந்தவர்கள் மிருகங்களின் உருவிலும், இன்னும் மோசமாக செயல்பட்டவர்கள் தாவரங்களின் உருவிலும், புகுந்து விடுவார்கள் என்பதும் நற்செயல்கள் புரிந்தவர்கள் மறு பிறவிச் சிக்கலில் இருந்து மோட்சம் அடைந்து கொள்கிறார்கள் என்ற கருத்துகளும் தவறானதாகும். ஏனெனில்

மறு பிறவிக் கொள்கை ஏற்புடையதல்ல என்பதற்கு மூன்று ஆதாரங்கள்

      மறுபிறவி தொடர்பாக மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் யாதெனில், முழு உலகின் அறிஞர்கள், அறிவியல் ஆய்வாளர்களின் ஏகோபித்த கூற்று “இப்பூமியில் முதன் முதலாக தாவரங்கள் முளைத்தன. பிறகு உயிரினங்கள் தோன்றின, அதன் பிறகு கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப்பின் தான் மனிதன் தோற்றம் பெற்றான்” என்பதாகும். இப்போது மனிதன் இன்னும் பூமியில் பிறக்கவே இல்லை எனும் போது, தவறு செய்த எந்த மனிதன் எந்த எந்த உயிர்களாகவும் தாவரங்களாகவும், மிருகங்களாகவும் மறுபிறவி எடுத்தன?

     இரண்டாவதாக, இந்த கண்ணோட்டத்தை ஏற்றுக் கொண்டால் இந்த பூமியில் மனிதப்பிறப்பு குறைந்து பிற உயிரினங்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்திருக்க வேண்டும் ஏனெனில் தவறு செய்யும் மனிதர்களே இவ்வுலகில் அதிகமாக இருக்கிறார்கள். நல்லவர்களாக வாழ்ந்து மறுபிறவியிலிருந்து விமோட்சனம் பெற்றுக் கொண்டவர்கள் குறைவானவர்களே. உலகில் பாவம் செய்பவர்களே அதிகம் ஆகவே மறுபிறவி தத்துவப்படி பிற உயிர்கள் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கவேண்டும் என்று ஏற்றுக் கொள்ள வேண்டியதிருக்கும். ஆனால் இம் மாபெரும் பூமியில் மனிதர்களும் கோடிக்கணக்கில் பெருகிக்கொண்டே தான் இருக்கிறார்கள். மேலும் எல்லா வகை மிருகங்களிலும், தாவரங்களிலும் தொடர்ந்து வளர்ச்சித்தான் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் நம் முன் உள்ள நிதர்சன உண்மை. வேறுவகையில் ஆய்வு செய்தால் முன்பு இருந்த பற்பல பிற உயிரினங்கள் அழிந்தும், அழிக்கப்பட்டும் வருவது நம்மால் அறியப்படும் உண்மையே.

    மூன்றாவதாக, உலகில் பிறப்பவர்கள் இன்னும் இறப்பவர்களின் எண்ணிக்கையில் வானம், பூமிக்கிடையில் உள்ள அளவு வித்தியாசம் காணப்படுகிறது. இறக்கும் மனிதர்களை விட, பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. மனித பிறப்பை குறைப்பதற்காக உலகநாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை செய்தும் பிறப்பை தடுக்க முடியவில்லை. இதை வைத்து ஒப்பிடும் போது இறப்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது மறுபிறவி கொள்கைப்படி நல்லவர் மோட்சம் பெற்று விட்டாலோ, தீயவர் பிற தாழ்ந்த படைப்பாக மாற்றம் பெற்றுவிட்டாலோ மனித பிறப்பில் குறைவுதான் ஏற்பட்டு இருக்கவேண்டும் என்பதையும்  கவனத்தில் கொண்டு இவ்விஷயத்தை பரிசீலிக்கவேண்டும்.

       சிலவேளை, சில குழந்தைகளைப்பற்றி, அவை தாம் முன்பு இருந்த இடத்தைப்பற்றி அடையாளம் தெரிந்து கொள்கின்றன. தமது பழைய பெயர்களையும் சொல்லிக் காட்டுகின்றன என்றும், மேலும் அவை புதிய பிறவி எடுத்திருக்கின்றன என்பதைப் பற்றியும் பிரபலப்படுத்தப்படுகிறது. ஆனால் இவையெல்லாம் கற்பனையான மற்றும் சாதாரண மக்களை நம்பவைக்கும் சாத்தானின் சூழ்ச்சிவேலைகளாகும். மேலும் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளுக்கு அது ஈடுகொடுக்க முடியாதவைகளாகும். மனிதர்களின் மார்க்க உணர்வையும் இறை விசுவாசத்தையும் கெடுக்கும் குறுக்கு வழிகளாகவே அவை இருக்கின்றன.
  
    உண்மை யாதெனில், மனிதன் மரணித்தபின் தன் எஜமானனான இறைவனிடம் செல்கின்றான். அதனால் தான் அனைத்து மதத்தினரும் மனிதனின் இறப்புச்செய்தியை தெறிவிக்கும் போது இறையடி சேர்ந்தார் என்று அறிவிப்பு செய்வது வழக்கில் இருந்துவருகிறது. அவ்வாறு இறைவனிடம் சென்றடையும் போது இவ்வுலகில் அவன் எப்படி செயல்பட்டானோ, அதற்கேற்ப தண்டனையையோ அல்லது நல்ல பிரதிபலனையோ பெறுவான் என்பது தான் சத்தியம்! மரணத்திற்குப்பின் ஒவ்வொரு மனிதனின் விஷயத்திலும் இது கட்டாயம் நிகழவே இருக்கிறது.

 செயல்களுக்கேற்பவே பலன் கிடைக்கும்

     நன் நம்பிக்கைக் கொண்டு நற்செயல் புரிந்து நேர்மையாக வாழ்ந்தால் அவன் சுவனம் செல்வான். அந்த சுவனபதியில் எல்லாவித சுகங்களும் அமைந்து இருக்கின்றன. அதன் வனப்பை வார்த்தைகளால் வருணிக்கமுடியாது ஏனெனில் அதன் தோற்றங்களை எந்த கண்ணும் பார்த்திருக்கவே முடியாது. அங்கு ஒலிக்கும் ரீங்கார இன்ப ஓசைகளை எந்த காதும் கேட்டிருக்காது. எந்த மனித மனதாலும் அதன் சிறப்புகளைக் கற்பனையாகக்கூட சிந்தித்திருக்க முடியாது. சுவன அருட்கொடைகளில் மிகப்பெரியது சுவனவாசிகள் அங்கே தமது எஜமானான இறைனை தம் கண்களால் கண்டுகளிப்பார்கள். அதற்கு ஈடான மகிழ்வும் குதூகலமும் வேறு எதிலும் இருக்காது. 

     அவ்வாறே தீய செயல்களில் ஈடுபட்டு, பாவ வாழ்க்கை வாழ்ந்து தன் எஜமானனுக்கு மாறு புரிந்தவர்கள் நரகில் போடப்படுவார்கள். அவர்கள் அதிலுள்ள கடும் நெருப்பில் எரிவார்கள். அங்கு அவர்களின் பாவத்திற்கு ஏற்ப பல்வேறுபட்ட தண்டனைகள் கிடைக்கும். மனித உடம்பின் மேல்பகுதியான தோலை நெருப்பு பொசுக்கினால் உடனுக்குடன் மீண்டும் மறு தோல் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். ஏனெனில் நரக நெருப்பின் வேதனையை அவர் அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக. இது இறைவேதமான குர்ஆனின் அறிவிப்பாகும். மேலும் மிகப்பெரிய தண்டனை யாதெனில் அவர்களுக்கு தம் எஜமானின் தரிசனம் கிடைக்காமல் போவதுதான். மேலும் அவர்களுக்கு, பலதரப்பட்ட தாங்க முடியாத வேதனை மிக்க தண்டனைகளும் கிடைக்கும்.

இறைவனுக்கு இணைவைத்தல் மிகப்பெரிய பாவம்

        அந்த சத்திய இறைவன் தன் திருமறை குர்ஆனில், நற்காரியங்கள் சிறிதும், பெரிதுமாக பலதும் உள்ளது என்றும், அவ்வாறே பாவங்களும், தீச்செயல்களும், சிறியதும், பெரியதுமாக பற்பலதும் உள்ளது என்றும் கூறியுள்ளான். ஆனால் இவை அனைத்திலும் மிகப்பெரும் தண்டனைக்கு நம்மை ஆளாக்கிவிடும் குற்றம், ஒன்று உண்டு அதனை அவன் ஒரு போதும் மன்னிப்பதில்லை, அதை செய்தவன் என்றென்றும் நரகின் வேதனையை அனுபவிப்பான். அவனுக்கு மரணமும் அங்கு நிகழாது. அது என்னவென்றால் ஏக வல்லவனாம் எஜமானனான இறைவனுக்கு இணைகற்பித்தலாகும். மேலும் அவனைத்தவிர, பிறரின் முன் தலை வணங்குவதும், பிறருக்கு முன் “பூஜிப்பது என்ற உணர்வுடன்” தன் கரங்களைக் கூப்புவதும் அதற்கு ஒப்பான செயல்களில் ஈடுபடுவதுமாகும். ஏனெனில் எஜமானனான இறைவனைத் தவிர இவ்வாறான உணர்வில் வேறு யாரையும் வணங்கவும் பூஜிக்கவும் செய்வது அவைகளை வணக்கத்திற்குத் தகுதியானவைகளாகக் கருதுவதற்கு ஒப்பானதே ஆகும். அது போன்றே மரணிக்கச் செய்பவன், உயிர் கொடுப்பவன், உணவளிப்பவன், இலாபம்-நஷ்டம் விளைவிப்பவன் என்று அந்த ஏக இறைவனைத்தவிர மற்ற யாரையும் எதையும் நம்புவது மிகப்பெரும் பாவமாகவும் இருக்கிறது. ஏனெனில் உண்மையில் இவ்வனைத்தையும் மனிதனின் வாழ்வில் நிகழச்செய்திடும் ஏக இறைவனை ஒரு வகையில் இது அவமதிக்கக்கூடியதாகவும் அவனுக்கு நன்றி கேட்டினை செய்திடும் அநீதமானதாகவும் இருக்கிறது.

        அதுபோன்றே நமக்காக படைக்கப்பட்டிருக்கும் “பூமியை” பூமாதேவி என்றும், “சூரியனை” சூரியபகவான் என்றும் சந்திரன், நட்சத்திரங்கள் அது போன்றே துறவி, மகான், சாதுக்களையும், பால்தரும் பசுக்களையும், பலன் தரும் மரங்கள் போன்ற இறைவனல்லாத எந்த ஒன்றையும் அவை இறையாம்சத்திற்கு தகுதிபெற்றிருப்பதாக நம்பிக்கைக் கொண்டாலும் வணங்கப்பட தகுதி பெற்றிருப்பதாக நினைத்தாலும் அவை அனைத்தும் இணைவைப்பதே ஆகும். அந்த சத்திய எஜமானை தவிர வேறு யாரையும் வணக்கத்திற்குரியவைகளாகக் கருதுதல் தான் இணை வைத்தலாகும். இது அனைத்து பாவங்களிலும் மாபெரும் பாவமாகும். இதனை அந்த எஜமான் ஒரு போதும் பொருந்திக்கொள்ளவும் மாட்டான் மன்னிக்கவும் மாட்டான். இதைத்தவிர வேறு எல்லா பாவங்களையும், அவன் நாடினால் மன்னிக்கப்போதுமானவன். இதனை நமது அறிவைக்கொண்டு நடுநிலையுடன் செய்யப்படும் ஆய்வும் தவறானதாகவே கருதுகிறது. எப்படி எனில் மேலே விவரிக்கப்பட்ட உலகில் உள்ள அனைத்து பொருட்களைக் காணவும் மனிதனே உயர்ந்தவனாக இருக்கிறான். அவனால் வணங்கபடக்கூடியவைகள் அவனைவிட உயர்ந்தவைகளாகவே இருக்கவேண்டும். அது போன்றே அவனால் உருவாக்கப்பட்டவைகளாகவும் அவை இருக்கக்கூடாது. இந்த உயர்ந்த கருத்து (பகவத்கீதை-10:3) வசமத்திலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவுப்பூர்வமான கருத்தையே தெளிவான நம் உள்ளமும் ஏற்றுக்கொள்ளும்.

ஓர் உதாரணம்

         உதாரணமாக ஒருவரின் மனைவி பெரும் சண்டைக்காரி பேச்சுக்குப் பேச்சு கணவனை திட்டி ஏசுபவள், அவன் சொல்வது எதையும் கேட்க்கமாட்டாள் அவ்வாரான தவறுகளைச் செய்பவள் மீது கோபமுற்ற கணவன் அவளை தனது வீட்டை விட்டு வெளியே போய் விடச் சொல்கிறான். அப்போது அதுவரை அவள் செய்துவிட்டிருந்த தனது தவறுகளை உணர்ந்து தனது கணவனிடம் மன்னிப்பு கேட்க்கிறாள். மேலும் கீழ்கண்டவாறு முறையீடும் செய்கிறாள் நான் உனக்கே சொந்தமானவள். உன்னை மட்டுமே எனது மனம் ஒப்பிய கணவனாக ஏற்றுவாழ்பவளாகவும் இருக்கிறேன். ஏகபத்தினியான நான் உன்னையே முழுமையாக நம்பி வாழ்ந்து கொண்டும் இருக்கிறேன். இனி நான் தவறு செய்யமாட்டேன். என் வாழ்நாள் முழுதும் உன்னுடைய மனம் விரும்பியபடி செயல்படக்கூடியவளாகவே இருப்பேன். நீ என்னை வெறுத்து துரத்தினாலும் உன் வாசற்படியிலேயே காத்துக்கிடந்து செத்து மடிவேன் வீட்டைவிட்டு வெளியேரமாட்டேன். கண் இமைக்கும் நேரமும் உன்னை விட்டு விட்டுப்பிரிந்து வெளியேறி வேரெங்கும் செல்லவும் மாட்டேன் என்று அவள் கூறினால், அவளின் தவறுகளால் கணவன் எவ்வளவு தான் கோபமுற்றிருந்தாலும், அவள் மீது பரிவும், பிரியமும் ஏற்பட்டு அவளைத் தன்னுடன் தக்கவைத்துக்கொள்வதன் மீது நிர்பந்தமாகிவிடுவான். இதற்கு மாறாக ஒருவரின் மனைவி நல்ல பணிவிடைகளை கணவனுக்கு செய்து வருகிறாள். அவனது உத்தரவுகளுக்கு அடி பணிபவள், அவள் எந்நேரமும் அவனை நல்ல முறையில் கவனித்துக் கொள்கிறவள். கணவன் நடுநிசியில் தனது பணிகளை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தாலும், அவனுக்காக காத்திருக்கிறாள். அவனுக்காக சூடாக உணவுகளைப் பரிமாறி உபசரிக்கிறாள். பாச, நேச வார்த்தைகளைப் பேசுகிறாள். ஆனால் ஒரு நாள் அவள் தன் கணவனிடம் “நீங்கள் என் வாழ்க்கைத் துணைவர் தான் எனினும் எனக்கு உங்களால் மட்டும் எனது அனைத்து காரியங்களும், தேவைகளும் நடப்பதில்லை. எனவே பக்கத்து வீட்டுக்காரரையும் என் இதரதேவைகளுக்காக துணைக்கணவனாக ஆக்கிக் கொள்கிறேன்” என்று கூறினால் என்ன விளைவு ஏற்படும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அதைக்கேட்க்க நேர்ந்த அந்த கணவனிடம் சிறிதளவேனும் ரோஷம் இருப்பின், அவளின் பேச்சை ஒருபோதும் தாங்கிக் கொள்ளமாட்டான். ஒன்று தன் மனைவியின் உயிரைப் பறிப்பான் அல்லது தற்கொலை செய்து கொண்டு செத்து விடுவான். இது ஏன்? ஏனெனில் எந்த ஒரு கணவனும், கணவன் என்ற ரீதியில் தனக்கு மட்டுமே சொந்தமான (கணவன் என்ற) உரிமையில் மற்றவர் சேர்க்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டான். அவள் தனக்கு மட்டுமே சொந்தமானவள் என்ற விஷயத்தில் பிறர்யாரையும் பங்காளியாக ஆக்கப்படுவதை தனது மனத்தளவில்கூட நினைத்து பார்க்கக்கூட விரும்பமாட்டான்.

     ஒரு துளி இந்திரியத்தினால் படைக்கப்பட்ட நாம், நம்முடைய வாழ்க்கைத்துணைவி விஷயத்தில் மட்டும் ஒரு பங்காளி இருப்பதை முற்றிலும் விரும்புவதில்லை எனில், இந்த அசுத்தத் துளியிலிருந்து மனிதனை படைத்த வல்லமை உள்ள பரிசுத்த எஜமானனான இறைவன் எப்படி தனக்கு மட்டுமே அடியார்களால் சொந்தமாக்கப்பட வேண்டிய வணக்கத்தில் பிறர் பங்காளியாக ஆக்கப்படுவதை ஏற்றுக்கொள்வான்? ஏனெனில் இந்த முழு உலகிலும் யாருக்கு எதுவெல்லாம் அவர்களின் வாழ்வுக்கு ஆதாயங்களாக கிடைத்துக்கொண்டு இருக்கின்றனவோ அவை அனைத்தும் அவனால் தான் வழங்கப்படுகின்றன. அப்படி இருக்க அவனுக்கு வேறு ஒன்றையோ அல்லது அவனல்லாத பிறவற்றையோ பங்காளி ஆக்கப்படுவதை (அவனுடன் வேறு பிறரையும் வணங்கப்படுவதை) அவன் எப்படி ஏற்றுக்கொள்வான்?
   
          ஒரு வேசிப்பெண் தன் உடம்பையும், மானத்தையும், மரியாதையையும் தன்னிடம் வருபவர்களுக்கு எல்லாம் அற்பப்பணத்திற்காகவோ – சிற்றின்ப சுகத்திற்காகவோ தாரைவார்த்துவிடுகிறாள். இதன் மூலம் தன் மீது உரிமை கொண்டாட பிறருக்கு அதிகாரம் அளித்து விடுகிறாள். அதன் காரணமாக, அவள் நம் பார்வையில் எப்படி கீழானவளாகி விடுகிறாளோ, அது போன்று தான், தன் அசல் எஜமானான ஒரே இறைவனை விட்டு விட்டு வேறு பலருக்கும் தனது உள்ளத்தில் இடமளித்து அவர்களை வணங்குவதில் லயித்துப் போய் விடுபவன் தன் எஜமானனான இறைவனின் பார்வையில் மிக கேவலமானவனாகவும், வெறுப்புக்குறியவனாகவும் ஆகிவிடுகின்றான்.

திருமறை குர்ஆனில் சிலை வணக்கம் பற்றி

         திருமறை குர்ஆனில் சிலைகளைப்பற்றியும், அதனை வணக்கம் புரிவது பற்றியும் ஓர் உதாரணம் கூறப்பட்டுள்ளது. அது  மிகவும் சிந்திக்கத் தக்கது.
(வணக்கத்திற்காக வல்லமைமிக்க இறைவனை விட்டுவிட்டு சிலைகளை தேர்வு செய்து கொண்டிருக்கும்) ஓ! மனிதர்களே உங்களுக்கு ஒரு உதாரணம் கூறப்படுகிறது (அதனை நல்லமுறையில் சிந்தித்துப்பாருங்கள்) “அல்லாஹ்வை விட்டுவிட்டு நீங்கள் வணங்கும் தெய்வங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரே ஒரு ஈயைக்கூட படைத்ததில்லை. படைக்கவும் முடியாது. ஈயைப்படைப்பது இருக்கட்டும். அந்த தெய்வங்களின் முன்பாக சமர்ப்பிகப்பட்ட பிரசாதப் பொருட்களில் இருந்து எதையேனும் ஈக்கள் எடுத்துச் செல்ல முற்பட்டால் அவற்றை விரட்டி, அப்பொருளைத் திரும்பப் பெறக்கூட அந்த தெய்வங்களால் முடியாது. ஏனெனில் அத்தெய்வங்கள் எத்தகைய இயலாமையானவர்களாவும் அதனை வணங்கும் பக்தர்கள் (சிந்திப்பில்) எத்தகைய பலவீனர்களாகவும் இருக்கிறார்கள் (பாருங்கள்.) மேலும் அவர்கள் ஏக இறைவனான அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி மதிக்கவில்லை, அவன் வல்லவனும், வலிமை மிக்கவனுமாவான்.” (அல் குர்ஆன்(22:73)

      இறைமறையில் கூறப்பட்டுள்ள இந்த அருமையான உதாரணத்தை நிதானமாகவும் நியாய உணர்வுடனும் சீர்தூக்கி பார்க்க கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் நம்மைப்படைத்த  படைப்பாளனாகவும், நம் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிவைப்பவனாகவும் ஏக எஜமானனான அல்லாஹ் ஒருவன் மட்டுமே இருக்கிறான். நம் கைகளால் உருவாக்கப்பட்ட சிலைகளான அவைகளை நாம் தான்(உருவாக்கி) படைத்தோம் அல்லவா? நம்மால் உருவாக்கப்பட்ட அந்த சிலைகளுக்கு சற்றேனும் சிந்திக்கும் அறிவோ அல்லது செயல்படும் நன்றி உணர்வோ இருந்தால் அதனை உருவாக்கக்காரணமாக இருக்கும் நம்மைத்தான் அவை வணங்க வேண்டுமே தவிர, நாம் அவற்றை வணங்குவது எவ்வளவு பெரிய தவறாகவும் அறியாமையாகவும் இருக்கிறது. இதனை அமைதியான உள்ளத்துடன் சிந்தித்துப்பாருங்கள். இது எவ்வளவு நியாயமானதாகவும், அறிவுபூர்த்தியானதாகவும் இருக்கிறது.

ஓர் தவறான சிந்தனை

       சிலர் கூறுவது போல, “நாம் அந்த துறவிகள்-சாதுக்கள், மற்றும் அவர்களின் சிலைகளை வணங்குவது, அவர்கள் தான் நமக்கு எஜமானனான இறைவனின் பாதையைக் காட்டித்தந்தார்கள். அவர்களின் பொருட்டினால் தான், நாம் இறைவனின் அருட்கொடைகளைப் பெற்றோம் என்பதற்காகத்தான்” அவர்களை வணங்குகிறோம் என்கிறார்கள். ஆனால் இக்கூற்று எத்தகையது எனில் ரயிலில் பிரயாணம் மேற்கொள்ள நாடிய ஒருவன் சுமை தூக்குபவனிடம் தொடர்வண்டியைப் பற்றி விபரம் கேட்டான். அவன் அது பற்றி விபரம் கூறிய பின், தொடர் வண்டியில் ஏறுவதற்கு பதில், தொடர்வண்டி பற்றி விபரம் கூறினார் என்பதற்காக, சுமை தூக்குபவன் மீதே ஏறிக்கொண்டது போன்றாகும்.

 அவ்வாறே, இறைவனைப்பற்றிய விளக்கங்களைத்தந்து வழிகாட்டியவர்களாக அம்மகான்கள் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களையே வணங்க முற்படுவது எவ்வகையிலும் பொருத்தமானதல்ல மற்றும் சிலரோ, “நாம் நமது மனதை ஒருமைப்படுத்தவும், சிந்தனையை மையப்படுத்தவுமே, அவர்களின் சிலைகளை வைத்து வணங்குகிறோம்!” என்று கூறுகிறார்கள். இது எப்படியென்றால், தனது தந்தையாரின் நினைவை மனதில் நிலைப்படுத்த, தன் முன்னால் ஒரு ஆட்டை வைத்துக்கொண்டு ஆட்டையே உற்று நோக்கிக் கொண்டிருப்பதைப் போன்றதாகும். ஏனெனில் தந்தையின் அந்தஸ்திற்கு அந்த ஆடு சிறிதும் பொருத்த மில்லாததாகவே இருக்கிறது. அதன் மூலம் தந்தை பற்றிய மன ஓர்மைக்கு முற்படுவதற்கு எதார்த்த நிலைக்கு அறவே ஏற்புடையதாக இருக்கமுடியாது.

     தந்தையின் மதிப்பு எங்கே? அதற்கு முன் ஆட்டின் நிலை எங்கே? அது போன்றே இந்த பலவீனமான சிலைகள் எங்கே? எல்லையற்ற வல்லமை படைத்தவனும், அன்பாளனும், அருளாளனும், கருணையாளனுமாகிய அந்த எஜமானனான இறைவனின் உயர் அந்தஸ்து எங்கே? பொருத்தமற்ற இது போன்றவற்றால் மன ஓர்மை நிலைபெறுமா? அல்லது நிலை குலையுமா? சிந்தித்து பாருங்கள்! 
   
    ஆக, எவ்விதத்திலும், யாரையும் இறைவனுக்கு இணை வைத்தல் மிகப்பெரும்   தவறாகும் - பாவமாகும். அதை இறைவன் ஒருபோதும் மன்னிப்பதில்லை என்பது மேலே கூறப்பட்ட விளக்கங்களின் மூலம் தெளிவாக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு ஏக இறைவனைத்தவிர்த்து பிறரை வணங்குபவன் ஏக இறைவனின் கோபத்திற்கு ஆளாகிவிடுகிறார். ஆகவே என்றைக்கும் நரகின் எரி கொள்ளியாவான் என்பதும் குர்ஆன் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ள இறைவனின் அறிவிப்பே ஆகும்.

நன்மையில் மிகச் சிறந்ததும் முதன்மையானதும் இறை விசுவாசமே!

       இவ்வாறே மிகச் சிறந்த நற்காரியம் இறை விசுவாசம் (ஈமான்) தான். இது பற்றி, உலகின் எல்லா மதத்தவரும் கூறுவது என்னவெனில் மரணமான உடன் உலகத்தொடர்புகள் அனைத்தும் அறுபட்டுவிடும். அவ்வனைத்தையும் இங்கேயே விட்டுவிட்டு நாம் பிரிந்து செல்ல நேரிடும், மரணித்தபின் மனிதனுடன் வெறும் இறை விசுவாசம் மட்டுமே செல்லும் என்பதாகும்.

      இறை விசுவாசம் என்பது ஒரே இறைவனை முழுமையாக நம்பிக்கைக் கொள்வதே ஆகும். அது போன்றே வணங்கப்படுவதற்கான தகுதியும், அதற்குரிய உரிமையும் யாருக்கு சொந்தமோ அந்த உரிமையை அவனுக்கு மட்டுமே சொந்தமாக்கப்படுவதற்குத்தான் சொல்லப்படும். ஆகவே வணங்கப்படுவதற்கு தகுதியான இறைவனுக்குறிய உரிமையை மறுப்பவரையும், உண்மைக்கு புறம்பாக இறைவன் அல்லாதவற்றை இறைவன் என்று நம்பி தனது இறை விசுவாசத்தை பாழ்படுத்துபவரையும் அநியாயக்காரர் என்றே கூறப்படும்.

        மனிதனின் மீது அவனைப் படைத்தவனுக்கு நிறைவேற்றிடும் மிகப்பெரிய கடமை என்னவெனில் மனிதன் உட்பட உலகில் உள்ள எல்லாவற்றையும் படைத்தவன், பரிபாலிப்பவன். வாழ்வையும், மரணத்தையும் கொடுக்கும் வல்லமையுள்ள எஜமானன், இரட்சகன் உண்மையான இறைவன் ஒருவன் மட்டுமே வணக்கத்திற்கும், வழிபாடுகளுக்கும் உரித்தானவன் ஆவான் என்று உறுதிப்பட நம்புவதே ஆகும்.

      எனவே, நாம் அந்த ஏக வல்லவனையே வணக்கத்திற்குரியவன் என்று வழிபட வேண்டும், அது போன்றே எஜமானனான அவனே நமக்கு லாபம், நஷ்டம், கண்ணியம், இழிவு ஆகிய அனைத்தையும் தருபவன் என்று நம்பவும் வேண்டும். நாம் இவ்வுலகில் ஜீவித்திருக்க கிடைத்துள்ள வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் அவனது பொருத்தத்தைப்பெருவது, இன்னும் அவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பதைக் கொண்டே நமது வாழ்நாள் கழிக்கப்பட வேண்டும். அவனையே நம்பி அவனுடைய உத்தரவுகளையே ஏற்று நடக்கவும் வேண்டும். இவ்வாறான நம்பிக்கைக்குப் பெயர் தான் இறை விசுவாசம்(ஈமான்) என்றும், சன்மார்க்கம்(தீன்) என்றும் சொல்லப்படும்.

      அவன் ஒருவன் மட்டுமே எஜமானன் என்பதை ஏற்காமல், அவனுக்கு மட்டுமே வழிப்பாட்டை சொந்தமாக்காமல், மனிதன் இறை விசுவாசியாக முடியாது. அதற்கு மாறாக, செயல்படுபவன் இறை விசுவாசமற்றவன் அல்லது இறைவிசுவாசத்திற்கு மாறு செய்பவன் என்றே கருதப்படுவான். அசல் எஜமானின் விசுவாசத்தை மறுத்து - அல்லது மறந்து, மற்றவர்கள் முன் விசுவாசம் காட்டுதல் என்பது எது போன்ற தென்றால் தனக்கோ – தனது வாழ்க்கையின் எந்த துறைக்குமோ சிறிதளவில் கூட சம்மந்தமில்லாத ஒருவரை மேலும் அவருக்கு அதற்கான எவ்வித தகுதியும் இல்லாத பஞ்சைப்பராரியாக அவர் இருக்கிறார் என்பதை நன்கு தெறிந்திருந்தும் வலியச் சென்று அவரைமதிப்பதற்கும், நன்றி சொல்ல முற்படுவதற்கும் ஒப்பான செயலாகும்.

சத்திய சன்மார்க்கம்

      ஓரிறை கொள்கையை அடிப்படையாகக் கொண்ட சத்திய மார்க்கம் ஆதிபிதா ஆதம்(அலை) அவர்கள் முதல் ஒன்றே ஒன்று தான். அச்சத்திய மார்க்கத்தின் அடிப்படை போதனை யாதெனில், அந்த ஏக நாயனை மட்டுமே இறைவனாக ஒப்புக்கொண்டு, அவனை மட்டுமே வணங்கி அவனது கட்டளைகளை ஏற்று நடக்க வேண்டும் என்பதே ஆகும்.

    அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும். ஏனெனில் அதில் இணைவைப்பது என்பது அறவே இல்லை. இஸ்லாமைத் தவிர வேறு எந்த மார்க்கத்தை மேற்கொண்டாலும் அதில் ஏதோ ஒருவகையில் இறைவனுக்கு இணைகற்பித்தல் இடம்பெற்றே இருக்கிறது. ஆகவே ஏகஇறைவனால் அது போன்ற மார்க்கங்களும், வணக்கங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (குர்ஆன்:3-85) என்று திருமறை குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

       மனித பலவீனம் யாதெனில், அவனது கண்ணால் ஒரு குறிப்பிட்ட எல்லைவரையே பார்க்க முடியும். அவனது செவிகளால், ஒரு குறிப்பிட்ட தூர அளவில் உள்ளவற்றையே கேட்க முடியும். அவன் நுகருவதற்கும், ருசிப்பதற்கும், தொடுவதற்கும் உரிய அனைத்து சக்திகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த ஐம்புலன்களால் தான் அவனது அறிவுக்கு விபரங்கள் கிடைக்கின்றன. இவ்வாறே அறிவின் செயல்பாடுகளும் கூட வரையறைக்குள் தான் உள்ளது. ஆகவே எவ்விதமான வாழ்வை நாம் வாழவேண்டும் என்று அந்த ஏகவல்லவனான எஜமானன் விரும்புகிறான் என்பதையும் அவனை எப்படி வணங்க வேண்டும்? மரணத்திற்குப்பின் என்ன நிகழும்? சுவனம் நரகிற்கு இட்டுச் செல்லும் செயல்கள் யாவை? இவற்றையெல்லாம் மனித அறிவால் சுயமாகப் புரிந்து கொள்ள முடியாது. ஐம்புல உணர்வுகளால் அடையாளம் காணவும் முடியாது. இதனைத்தழுவிய கருத்து பகவத்கீதை 7:24லிலும் இடம்பெற்று இருக்கிறது.

இறைத்தூதர்

     மனிதனின் இவ்வாறான பலவீனத்தின் மீது இறைவன் இரக்கம் கொள்கிறான், தனது புறத்திலிருந்தே நேர்வழிகாட்டலுக்காக இறைத்தூதர்களை அப்பதவிக்குப் பொருத்தமான மனிதப்புனிதர்களை தேர்வு செய்து அனுப்பிவைக்கிறான். அந்த மகத்தான தூய மனிதர்கள் மீது வானவர்களின் மூலம் தன் தூதுவ தகவல்களை இறக்கிவைக்கிறான். அவர்கள் மனிதர்களுக்கு இறைவனின் பொருத்தத்திற்கு ஏற்புடைய நேரான வழியில் வாழ்வதற்கும், இறைவனை, அவன் ஏற்றுக்கொள்ளும் முறையில் வணங்குவதற்குமுள்ள சீரிய வழிகாட்டுதல்களை தங்களின் சொல்லாலும் செயலாலும் விளக்கித்தந்தார்கள். மனிதர்கள் தம் சுய அறிவால் புரிந்து கொள்ள முடியாததும், மேலும் இறைவனுக்கு பொருத்தமானதுமான சிறப்பிற்குரிய வாழ்வியல் பரிமாற்றங்களையும் சொல்லிக் கொடுத்தார்கள்.

    அத்தகைய மாமனிதர்கள் தான் நபிமார்(“இறைத்தூதர்)கள்” என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் மீது இறைத்தூது தகவல்கள் அருளப்பட்டது என்பதால், அவர்கள் இறைவனின் அவதாரம் என்று ஒரு போதும் கூறப்பட மாட்டார்கள். அவர்கள் இறைவனால் அனுப்பப்பட்டுள்ள தூதுவர்களாக இருக்கிறார்கள் என்று மட்டுமே நம்பப்படவேண்டும். ஆனால் அவர்கள் மனிதர்களில் நபித்துவ சிறப்பை பெற்றுக்கொண்டுள்ள மனிதப்புனிதர்களாக கருதப்படக்கூடியவர்கள்.

       அவதாரம் என்றால் இறைவனே ஒருமனிதரின் அல்லது வேறு ஒரு பொருளின் வடிவில் தோன்றியுள்ளான் அல்லது அம்மனிதரிலோ அப்பொருளின் வடிவிலோ இறைவன் இறங்கியுள்ளான் என்று கருதப்படுவதற்கு சொல்லப்படும். இது கண்மூடித்தனமான நம்பிக்கை. இது மாபெரும் பாவம். இந்த குருட்டுத்தனமான நம்பிக்கையானது, எஜமானனான இறைவனின் தனிப்பட்ட வணக்கத்திலிருந்து மனிதர்களை அகற்றி விடுகிறது. இது மதபோதனைகளைச் செய்யும் மனிதனையோ அல்லது அவரின் மறைவுக்குப்பின் அவரையே சிலையாக வடித்து வணங்கும் நிலைக்கோ மனிதர்களைக் கொண்டு சென்றுவிடுகிறது. இது ஒரே இறைவனை வணங்குவதற்கு புறம்பான வழிகேடென்ற சதுப்பு நிலத்தில் மக்களை சிக்கவைத்து விடக்கூடியதாகும்.

           மக்களுக்கு சத்திய வழியைக்காட்டுவதற்கென அல்லாஹ்வினால் தேர்வு செய்யப்பட்ட சிறப்பிற்குறிய அம்மாமனிதர்கள், ஒவ்வொரு ஊருக்கும், பகுதிக்கும், காலத்திற்கும் தொன்றுதொட்டு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஓரே இறைவனையே நம்பினர். அவனுக்கு மட்டுமே வணக்கம் புரியவும் வலியுறுத்தினார்கள். இறைவனின் மார்க்க சட்டங்களாக இறைவனின் புறத்திலிருந்து அருளப்பட்டவைகளின்படி தாங்களும் செயல்பட்டு மக்களையும் அவ்வாறே கடைபிடிக்கவும் கூறினார்கள். அவர்களில் எந்த ஒரு தூதரும் ஓர் இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்கவும் இல்லை. தங்களையோ பிறதெய்வங்களையோ வணங்கும்படி மக்களை அவர்கள் அழைக்கவுமில்லை. மாறாக அவர்களின் மிகமுக்கிய பணியே இந்த இணைவைப்பு பாவத்திலிருந்து மக்களை கடுமையாக தடுத்ததுதான். அவர்களின் பேச்சை ஏற்று இச்சத்திய பாதையில் பெரும்பாலான மக்கள் பயணிக்கலானார்கள். இவ்உண்மையை நியாய உணர்வுடன் சிந்தித்து பார்க்காதவர்கள் துவக்க காலத்தில் மறுக்கவும் செய்தார்கள்.

சிலை வணக்கத்தின் ஆரம்பம்

     இத்தகைய இறைத்தூதர்கள் அனைவரும், இன்னும் அவர்களின் சிஷியர்களாக அவர்களைப் பின்பற்றி வாழ்ந்திருந்தவர்களும், மனிதர்களாகவே இருந்தனர். ஆகவே பிறமனிதர்களைப் போன்று அவர்களையும் மரணம் தழுவிக்கொண்டது. (மரணம் தழுவாதவன் இறைவன் ஒருவன் மட்டுமே).
     
       நபித்துவ சேவைகளைச் செய்துவந்த அந்த இறைத்தூதர்கள் இறந்ததன் பின் அவர்களை ஒப்புக்கொண்டிருந்தவர்களுக்கு சதா அவர்களின் நினைவு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. மேலும் அவர்களின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்தார்கள். அவர்களின் நினைவால் ஏக்கமுற்று அதிகம் அழுது கொண்டும் இருந்தார்கள். சாத்தானிற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திகொடுத்துவிட்டது. 

       அவன் மனிதனின் தீராப் பகைவன். மனிதனை அல்லாஹ் சோதித்து பார்க்கவிரும்பினான், யார் தன்னைப் படைத்த எஜமானை நம்புகின்றனர்? யார் சாத்தானை நம்புகின்றனர்? என்பதை சோதித்துப் பார்ப்பதற்காக தீயவழிகளை காட்டக்கூடியவனாக சாத்தானை இறைவன் படைத்துள்ளான். இறைத்தூதுவர்களின் பிரிவாற்றாமையை தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்த மனிதர்களை வழி கெடுக்கவும், தீய உணர்வுகளை அவர்களின் மனதில் போடவும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுவிட்டான். எப்படி என்றால் சாத்தான் மனிதர்களிடம் வந்து, உங்களுக்கு உங்களின் இறைத்தூதர் மீது அளவு கடந்த அன்பு உள்ளது. மரணத்திற்குப்பின் அவர் உங்களது பார்வையிலிருந்து மறைந்துவிட்டார். எனவே அவருக்கு ஒரு சிலை வடித்து அதைப்பார்த்து பார்த்து மன அமைதியை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினான். சாத்தானின் ஆலோசனைப்படி அத்தூதுவர்களின் சிலை வடிக்கப்பட்டது. அம்மக்கள் தங்களின் மனம் நாடும் போதெல்லாம் முதலில் அந்தச்சிலையை சென்று பார்த்து மன அமைதியைப்பெற்று வந்தார்கள். சன்னம், சன்னமாக சிலைகளின் பற்று அவர்களின் மனதில் பதிந்து விட்டதைக்கண்ட சாத்தான், “நீங்கள் இந்த சிலைக்கு முன் சிரம் தாழ்த்தினால், இந்த சிலைக்குள் இறைவனையே காண்பீர்கள்” என்றான். மனித மனதில் ஏற்கனவே அந்த சிலை மீது பற்று இடம்பிடித்து அது அன்பாக மாறத்துவங்கி இருந்தது. அதுவே பக்தியாகமாறி பின்பு சிலைவணக்கமாகவே மாறிவிட்டது. இயேசு கிருஸ்த்து(ஈசாநபி)வையும் அவருடன் சிலுவையையும் வணங்கும் பழக்கங்கள் இவ்வாறே துவக்கமானது. அது போன்றே உலகவாழ்வில் மன அமைதியைப் பெறுவதற்கான காரணங்களையும், துக்கங்களிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளையும் முன்வைத்தே கவ்தமபுத்தர் போதனைகளைச் செய்துவந்தார். கடவுள் பற்றிய எவ்வித கோட்பாட்டையும் கொண்டிராத அந்த புத்தரையே அவர் மீது கொண்ட அன்பால் அவரின் மறைவுக்குப்பின் அவரையே கடவுளாக ஆக்கி மக்கள் வணங்க முற்பட்டதும் இதே அடிப்படையில் துவங்கப்பட்டதே ஆகும்.

        எனவே, துவக்கத்தில் சிலைக்கு மரியாதை செய்ய முற்பட்ட மக்கள், அதற்கு சிரம் பணியவும், அதை பூஜிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். வணங்குவதற்கு இறைவன் மட்டுமே அருகதையுள்ளவனாக இருக்க அவனை அறியவும் அவனது அன்பைப்பெறவும் வழிகாட்டிய இறை தூதுவர்களின் உருவசிலைகளையே இந்த அடிப்படையில் தான் வணங்க முற்பட்டு விட்டார்கள். அவர்களின் சிலைகளையும் நாளடைவில் இறைவனாகக் கருதி பூஜிக்கலானார்கள். அதன் மூலம் இணை வைப்பில் சிக்கிவிட்டார்கள். இந்த முழு உலகின் மகத்துவம்மிக்க தலைவனாக மனிதனையே இறைவன் படைத்திருக்கிறான். இவ்வளவு உயர்வைப்பெற்றுள்ள மனிதன் கல், மண், மரத்தால்(உருவாக்கப்பட்ட சிலைக்கு) முன் தன் சிரத்தை தாழ்த்துவது எந்த வகையிலும் நியாயமானதோ பொறுத்தமானதோ அல்ல. சரியான சிந்திப்பில்லாமல் இவ்வாறு செயல் படுவதன் மூலம் மனிதன் தன்னையே தாழ்த்திக்கொண்டுவிட்டான். இழிவையும், கேவலத்தையும் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்டு விட்டிருக்கிறான்.

     இவ்வாறான இணைகற்பித்தலின் காரணத்தால் தன் எஜமானின் பார்வையிலிருந்து வீழ்ந்து நிரந்தரமாக நரகின் எரிகொள்ளியாக தங்களைத் தாங்களே ஆக்கிக்கொண்டுவிட்டனர். இதன் பின்பும் அல்லாஹ் தனது பேரருளால் மீண்டும் மீண்டும் தன் புறத்திலிருந்து தூதர்களை வழிகாட்டிகளாக அனுப்பிக்கொண்டே இருந்தான். அவர்கள் மக்களை சிலை வணக்கத்திலிருந்தும், அல்லாஹ்வைத் தவிர உள்ள மற்ற எல்லாவற்றை பூஜிப்பதிலிருந்தும் மக்களை தடுத்துவந்தார்கள். சிலர் அவர்களின் பேச்சை ஏற்றுக்கொண்டனர் மற்றும் சிலர் மறுத்தனர். ஒப்புக்கொண்டவர்கள் மீது அல்லாஹ் மகிழ்வு கொண்டான். நபிமார்களின் வழிகாட்டலுக்கும் அறிவுரைகளுக்கும் மாறு புரிந்தவர்களையும் அவர்களுக்கு தீங்கு இழைத்தவர்களையும் அல்லாஹ் வெறுத்தான். அழித்தொழிக்கவும் செய்தான். இவ்வாறான நிகழ்வுகள் பற்றி குர்ஆனில் பல இடங்களில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறைத்தூதர்களின் இனிய போதனைகள்.

            மனித குலத்தின் ஆதிபிதா ஆதம்(அலை) அவர்களில் துவங்கி ஒருவரின் பின் ஒருவராக இறைத்தூதர்கள் மனிதர்களுக்கு நேரிய வழியை காட்டுவதற்காக இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் போதித்த சன்மார்க்கத்தின் அடிப்படை கொள்கை ஒன்றாகவே இருந்தது. அவர்கள் அனைவரும் ஒரே மார்க்கத்தின்பால் தான் மக்களுக்கு அழைப்புக்கொடுத்து வந்தார்கள். அதாவது, ஓரே இறைவனை ஒப்புக்கொள்ளுங்கள்! எதைக்கொண்டும் யாரைக்கொண்டும் இறைவனது உள்ளமையிலும் பண்புகளிலும் இணையை வைக்காதீர்கள். அது போன்றே அவனது வணக்கத்தில் எதையும் யாரையும் பங்காளியாக்காதீர்கள். மேலும் அவனது தூதர்கள் அனைவரையும் உண்மையாளர்கள் என நம்புங்கள். வானவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட அவனது பரிசுத்த படைப்பு. அவர்கள் உண்ணவும், பருகவும், உறங்கவும் தேவையற்றவர்கள். அவர்கள் எல்லா வேலைகளிலும் எஜமானின் ஆணைக்கு அடிபணிந்து நடப்பவர்கள், அவ்வாறான தனது வானவதூதர் மூலமாக இறைவன் நபிமார்களுக்கு அனுப்பிவைத்த (ஸுஹ்ஃபு) அறிவிப்புகளும், இன்னும் அவனால் இறக்கிவைக்கப்பட்ட வேத நூல்கள் அனைத்தும் உண்மையானவை என்று நம்புங்கள். என்றும் மக்களுக்கு போதித்துவந்தார்கள்.

           மரணித்தபின் மீண்டும் ஒரு நாள் உயிர்ப்பிக்கப்பெற்று எழுப்பப்படுவோம் நாம் செய்த நல்ல, கெட்ட செயல்களின் பிரதிபலன்களை அங்கு பெற இருக்கிறோம் என்பதையும், மேலும் இறைவன் தனது படைப்புகளைப்பற்றி அறிந்திருந்த(விதியின்)படி நல்லது, கெட்டது யாவும் நிகழக்கூடியவைகளாக இருக்கின்றன என்றும் நம்புங்கள்! இறைவன் புறத்திலிருந்து தங்கள் மீது அருளப்பட்டுள்ள வாழ்வதற்கான வழிமுறைகள்களின்படி வாழ்க்கையை நடத்தாட்டுங்கள் என்றும் அந்த இறைதூதர்கள் போதித்துவந்தார்கள்.

      உலகில் தோன்றிய இறைத்தூதர்கள் அனைவரும் உண்மையாளர்களாகவே இருந்தனர். அவர்கள் மீது இறக்கிவைக்கப்பட்ட வேதங்கள் அனைத்தும் மெய்யானவைகளாகவே இருந்தன என்பதில் சந்தேகமில்லை ஆகவே அவர்கள் அனைவரையும் உண்மையான இறைதூதர்கள் என்று நம்பவேண்டும். அவ்வாறே அவர்கள் மீது இறக்கிவைக்கப்பட்ட வேதங்கள் எல்லாவற்றையும் இறைவேதம் என்று நாம் நம்பவேண்டும். அவர்களிடையே எந்த ஏற்றத் தாழ்வையும் நாம் கற்பிக்கக்கூடாது. உண்மையான இறைதூதர் என்பதற்கான உரைகல் யாதெனில், அவர்களின் பணி ஒரே ஒரு இறைவனை ஒப்புக்கொள்ளும் படி மக்களுக்கு அழைப்பு விடுப்பதே ஆகும். ஆகவே அவர்களின் போதனைகளில் ஓர் இறைவனை விட்டுவிட்டு, வேறு யாரையுமோ அல்லது தன்னையோ பூஜிக்குமாறு அவர்கள் சொல்லுவதற்கான வாய்ப்பு அறவே இருக்கமுடியாது. ஏனெனில் ஒரே இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று தான் அவ்வேதங்கள் மூலம் இறைவன் கட்டளை இடப்பட்டிருந்தான். அதன்படியே தங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த இறைதூதுவர்கள் அனைவரும் ஒரு இறைவனையே வணங்கிவந்தார்கள். அதனையே வலியுருத்தி மக்களுக்கு போதித்தும் வந்தார்கள்.

          எனவே இன்றைய உலகில் வாழ்ந்துவரும் அல்லது முந்தயகாலத்தில் வாழ்ந்து மறைந்த எப்பேர்பட்ட மஹா புருஷர்களாக இருந்தாலும் அல்லது அவர்களை பின்பற்றுபவர்கள் யாராக இருந்தாலும் சிலை வணக்கம் அல்லது பல தெய்வ வழிபாட்டின் போதனைகள் அவர்களிடம் காணப்பட்டால் அவர்கள் ஒன்று இறைதூதர்களாக இருக்க முடியாது. அல்லது அவர்களது போதனைகள் பிற்காலத்தில் மாற்றப்பட்டுவிட்டன என்பது தான் உண்மை நிலையாகும். ஹளரத் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு முன் வந்த இறைத்தூதர்கள் அனைவரின் போதனைகளும் இவ்வாறு தான் பிற்காலத்தில் வந்தவர்களால் பல்வேறு மாற்றங்களுக்கு இலக்காகிவிட்டன. அவர்கள் மூலம் அருளப்பட்ட இறைவேதங்களிலும் கூட பல மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டன. கடைசியாக இவ்உலகிற்கு இறுதி தூதுவராக அனுப்பப்பட்ட முஹம்மது(ஸல்) அவர்கள் ஒரே இறைவனையே வணங்கிவந்தார்கள் மக்களுக்கும் அதையே போதித்தும் வந்தார்கள். முற்காலத்தில் தோன்றிய இறைதூதுவர்களின் மறைவுக்குப்பின் அவர்களைப்பின் பற்றி இருந்த மக்களிடம் இணைவைக்கும் வழக்கம் தோன்றுவதற்கு எவைகளெல்லாம் காரணங்களாக இருந்தனவோ அவை அனைத்தையும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தடுத்துவிட்டார்கள். எப்படி எனில் இறைதூதுவரான தனது உருவத்தை செதுக்குவதை மட்டுமல்ல தனது உருவத்தை வரைவதையே கூட கடுமையான பாவம் என்று கூறி தடுத்தார்கள். ஏனெனில் பிற்காலங்களில் அவ்வுருவத்தை வைத்தே இணைகற்பித்து தன்னையே தெய்வமாக வணங்கப்படும் வழக்கம் தோன்றி விடக்கூடாது என்பதே அதற்கான முக்கிய காரணமாகும். இன்னும் ஒரு படி மேலே சென்று மனிதன் மட்டுமல்ல உயிருள்ள எந்த பொருளையும் வரையக்கூடாது என்றும் கடுமையாக தடுத்துள்ளார்கள். மேலும் ஜீவனுள்ளவற்றின் உருவப்படங்களைக்கூட வீட்டில் வைத்திருந்தால் இறைவனின் அருள் அவ்வீட்டில் நுழையாது என்றும் எச்சரித்துள்ளார்கள்.

இறைத்தூதர் ஹளரத் முஹம்மது(ஸல்).

      ஒரு மகத்தான உண்மை யாதெனில், உலகிற்கு இதற்கு முன் வந்த அனைத்து இறைத்தூதர்களின் மூலமும், அவர்களுக்கு அருளப்பட்ட வேதங்கள் மூலமும், இறுதிதூதரான முஹம்மது நபியின் வருகை பற்றி முன் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

         மேலும் அந்த இறுதி தூதர் அவர்கள் வந்த பின் முந்தைய மதங்கள், முந்தய சட்டங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு, கடைசியாக வந்த முஹம்மது நபி(ஸல்) அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் மூலம் கொண்டு வரப்பட்ட வேதம் மற்றும் மார்க்கத்தின் படியே நடக்க வேண்டும் என்றும் முன் உள்ள அவ்வேதங்களில் கூறப்பட்டுள்ளது.

        அவ்வாறான முன் வேதங்களில் அளவு கடந்த அடித்தல், திருத்தல் செய்யப்பட்டு இருந்தும் கூட இறுதி தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வருகைபற்றிய செய்தியை எவ்வளவோ முயற்சித்தும் மாற்றித்திருத்திட அவர்களால் முடியவில்லை. இது ஏக இறைவனால் செய்யப்பட்டுள்ள உறுதியான ஏற்பாடாகவே இருக்கிறது. ஏனெனில் முந்தய மார்க்கத்தவர்கள் தமக்கு அருளப்பட்டுள்ள வேதத்தின் மூலம் இறுதி நபியின் வருகைப்பற்றிய விவரம் எதுவும் தங்களின் வேதங்களில் குறிப்பிடப்படவில்லை என்று மறுமை நாளில் இறைவன் முன் விதண்டாவாதம் செய்துவிடக் கூடாதல்லவா? இதுவும் இஸ்லாமின் பகிரங்க சத்தியத்திற்கான பலமான ஆதாரமாகும்.

           குறிப்பாக இந்திய வேதங்களிலும், உபநிஷத்துகளிலும் முஹம்மது நபி அவர்களைப்பற்றி “நராஷுனஸ்” என்றும், பவிஷ்ய புராணம் 3:3 5-8ல் “மஹாமத்” என்றும் “கல்கி அவதாரம்” என்றும், அதர்வண வேதம் 20வது புத்தகம் 1-13 வரையும், 21 வது புத்தகம் – 9 வசனம், சாமவேதம் புத்தகம் 11, வசனம் 8.  மனுஸ்மிருதி அத்தியாயம் 11,வசனம் 202லும், மேலும் பைபிளில் “பாரகலீத்” தமிழில் தேற்றரிவாளர்(யோவான் 14:26) என்றும், புத்த கிரந்தங்களில் “இறுதி புத்தர்” என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளது. அந்த மதநூல்களில் ஹளரத் முஹம்மது(ஸல்) அவர்களின் பிறப்பிடமும், பிறப்பு தேதி, நேரம் இன்னும் அவர்களை பற்றிய அநேக வெளிப்படையான அடையாளங்களும் அதில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் அகப்பண்புகள் பற்றியெல்லாம் விரிவாக அதில் கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல ரிக்வேதத்தின் பல இடங்களிலும் இதுபற்றிய ஆதாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹளரத் முஹம்மது(ஸல்) அவர்களின் புனித வாழ்வின் அறிமுகம்

         சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் கி.பி.610ல் இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் சவூதி அரேபியாவின் மக்கா நகரில் பிறந்தார்கள். பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே அவர்களின் தந்தை மரணமடைந்துவிட்டார். பிறந்த பின் ஆறு ஆண்டுகளில் தாயாரும் இறந்துவிட்டார்கள். அதன் பின் தாத்தாவும், தாத்தா அவர்களின் மரணத்திற்குப்பின் அவர்களின் பெரியப்பாவும் அவர்களை வளர்த்தார்கள். தாய் தந்தை அற்ற அனாதையான நபி(ஸல்) அவர்கள் அக்காலத்திய மக்கள் அனைவரிலும் வித்தியாசமானவராகவும், தனித் தன்மையுடையவராகவும், திகழ்ந்தார்கள். மக்கா வாசிகள் அனைவரின் கண்களுக்கும் மின்னும் தாரகையாகவும் அவர்கள் தோன்றினார்கள். அதனால் அவர்கள் வளர, வளர அவர்களின் மீது மக்களின் அன்பும், பாசமும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அவர்கள் அறவே பொய் பேசாதவராகவும், நம்பிக்கையாளராகவும் வாழ்ந்திருந்தார்கள். ஆகவே அவர்கள் “உண்மையாளர்”, “நாணயமிக்கவர்” என்று அக்காலத்தில் வாழ்ந்திருந்த அனைத்து மக்களாலும் அழைக்கப்படலானார்கள். மக்கள், தங்களின் விலை உயர்ந்த பொருட்களை அமாநிதமாக அவர்களிடம் கொடுத்து பாதுகாப்பு செய்துவந்தனர். தங்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகளுக்கு அவர்களின் மூலமே தீர்வுகளையும் பெற்றுக்கொண்டனர். அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக.

        நபி(ஸல்) அவர்களின் இளமைப்பருவத்தில் மக்காவில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அல்லாஹ்வை வணங்க உலகில் முதன் முதலில் உருவாக்கப்பட்டது கஅபா என்னும் ஆலையமாகும். புனித இல்லமாகப் போற்றப்படும் அந்த கஅபாவை புதுப்பிக்கும் பணி அப்போது நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. அதன் வெளி சுவற்றின் ஒரு மூலையில் “ஹஜருல் அஸ்வத்” என்னும் புனிதக் கல் இடம் பெற்றிருந்தது. அக்கல்லை மீண்டும் அது பொருத்தப்பட வேண்டிய இடத்தில் வைக்க வேண்டிய கட்டம் வந்தபோது, அதன் புனிதம் காரணமாக மக்காவின் அனைத்து கோத்திரத்தாரும், அதன் தலைவர்களும், அப்புனிதக்கல்லை கஅபா ஆலையத்தில் பொருத்தி வைக்கும் பெருமை தங்களுக்கே கிடைக்க வேண்டும் என்று விரும்பினர். போட்டா, போட்டியில் சண்டையிட்டுக்கொள்ள வாட்கள் உருவப்படலாயின. அப்போது தான் ஒரு விவேகமுள்ள மனிதர் “நாளை காலையில் முதன்முதலாக கஅபா ஆலயத்திற்கு யார் வருவாரோ அவர் செய்யும் முடிவுப்படி நாம் நடந்து கொள்ளலாம்” என்றதொரு ஆலோசனையைக் கூறினார். அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். என்ன ஆச்சரியம்! மறுநாள் காலையில் வந்த முதல் மனிதர் முஹம்மது(ஸல்) அவர்கள் தான். அவர்களைப் பார்த்ததும் எல்லோரும் ஒரே குரலில் ஆஹா! நம்மிடையே மிக்க “உண்மையாளர்”, “நாணயமிக்கவர்” வந்துவிட்டார்! அவரது முடிவை நாம் அனைவரும் முழுமனதுடன் ஏற்போம்! என்று ஒருமித்த குரலில் கூறினார்கள்.

அருமையான தீர்ப்பு

    முஹம்மது(ஸல்) அவர்கள், இந்த பிரச்சனைக்கு சிறப்பான தொரு தீர்வை செய்தார்கள் ஒரு போர்வையை விரித்து, அதில் அப்புனிதக்கல்லை வைத்து அனைத்து கோத்திரத்தாரின் தலைவர்களையும், போர்வையின் ஓரங்களைப் பிடித்து தூக்க வைத்தார்கள். அப்புனிதக்கல் இறைஇல்லக்கட்டிடத்தில் பொருத்தி வைக்கப்படும் இடத்திற்கு அருகில் கொண்டு வரப்பட்டதும், அத்தலைவர்களின் ஒப்புதலோடு நபி அவர்கள் தங்களின் கரங்களால் அக்கல்லை எடுத்து உரிய இடத்தில் பொருத்தினார்கள். நபிப்பட்டம் அருளப்படுவதற்கு முன்பு இன்நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதன் மூலம், மூண்டுவிட இருந்த போர் முடிவடைந்து விட்டது. ஏனெனில் அப்புனிதப் பணியில் தாங்கள் அனைவருக்கும் பங்குகிடைத்துவிட்ட முழுதிருப்தியை அனைத்து கோத்திரத்தாரும் அடைந்து கொண்டுவிட்டார்கள்.

     இவ்வாறே மக்கள் தங்களுக்கிடையில் தோன்றிவிடும் பிரச்சனைகள் அனைத்திலும் நேர் வழிகாட்டலுக்கு முஹம்மது(ஸல்) அவர்களையே நாடிவருவார்கள். நபி அவர்கள் வெளியூருக்கு பயணம் புறப்பட்டுவிட்டால் மக்கள் நிம்மதி இழந்து விடுவார்கள். பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியதும் அவர்களைச் சந்தித்து அன்பின் வெளிப்பாட்டால் தேம்பித் தேம்பி அழுவார்கள். முஹம்மது(ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதை அடைந்த போது, அவர்களை இறைத்தூதராகத் தேர்வு செய்யப்பட்ட நற்செய்தியை அல்லாஹ் தனது வானவத்தூதர் மூலம் அறிவித்தான். மேலும் திருமறை வேதமான குர்ஆனின் சில வசனங்களை துவக்கமாக அவர்கள் மீது அருளினான். அதனைத் தொடர்ந்து மக்களை ஏகத்துவத்தின்பால் அழைக்கும் பொறுப்பையும் அவர்களுக்கு ஒப்படைத்தான். அன்றைய காலகட்டத்தில் மக்கமா நகர மக்களின் வாழ்வும் புனித கஅபா ஆலயத்தின் நிலையும் மிகவும் மாசடைந்திருந்தது. இறை இல்லம் கஅபாவில் 360 சிலைகள் இருந்தன. தேவர், தேவிகள் என்று பலதரப்பட்ட சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அக்காலத்தில் பிறநாடுகளைப் போன்றே அரபு தேசம் முழுவதும், வம்ச இன குல ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, பெண்கொடுமை, மது, வட்டி, வம்புச், சண்டை, விபச்சாரம் போன்ற எல்லா பாவ பழிச்செயல்களும் தலைவிரித்துத் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. இவ்வாறான சூழ்நிலையில் உலகமக்களின் மீது ஏக இறைவன் தனது பேரருளைச் சொரிய முஹம்மது நபி(ஸல்) அவர்களை வழிகாட்டியாக அனுப்பிவைத்தான். அவர்கள் மக்காவை மட்டுமல்ல உலகையே கல்வி இருந்த இருளை அகற்றிடும் ஒளிப்பிழம்பாக மக்கத்தில் தோற்றம் பெற்றார்கள்.

உண்மையின் குரல்

      அல்லாஹ்வின் ஆணைக்கிணங்க நபித்துவ தகவல்களை மக்களுக்கு அறிவிப்பதற்காக நபியவர்கள் மக்காவில் உள்ள ஒரு மலைக்குன்றின் மேல் ஏறி மக்களுக்கு அழைப்பு கொடுத்தார்கள். அதனைக் கேட்ட மக்கள் அனைவரும், உண்மையாளர், நாணயமிக்கவராக கருதப்பட்டவரின் அழைப்பு என்பதற்காக, ஒன்று திரண்டு விட்டார்கள். அங்கு கூடியவர்களிடம் எனது சகோதரர்களே! “இந்த மலையின் பின்புறத்திலிருந்து ஒரு பெரும் படை உங்களைத் தாக்கவந்து கொண்டு இருக்கிறது என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?” என்று நபி(ஸல்) அவர்கள் அம் மக்களிடம் கேட்டார்கள்.

      அதற்கு அனைவரும் ஒரு குரலாக தங்களின் கூற்றை யார் நம்பாமலிருப்பார்கள். தாங்கள் ஒருபோதும் பொய்யுரைத்ததில்லை! மேலும் மலையின் மறு புறத்தை நாங்கள் நேரடியாக பார்க்க முடியாத நிலையில் இருக்கிறோம். தாங்களோ மலை உச்சியில் இருந்து கொண்டு மறுபக்கத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் உண்மையை மட்டுமே பேசக்கூடியவராகவும். எங்களின் முழுமையான நம்பிக்கைக்கு உரித்தானவராகவும் இருக்கிறீர்கள். ஆகவே உங்களின் அறிவிப்பை முழுமையாக நாங்கள் நம்புகிறோம் என்று ஒருமித்து கூறினார்கள். இவ்வாறு அம்மக்களின் ஏகோபித்த வாக்குமூலத்தைப் பெற்ற பின், அம்மக்களிடம் நான் இறைவனின் தூதுவர் என்ற நபிப்பட்டத்தை அல்லாஹ்வின் புறத்திலிருந்தே வழங்கப்பட்டிருக்கிறேன். இந்த தகவல்களை அவனது அறிவிப்பின் படியே உங்களிடம் கூறுகிறேன். நாம் வாழ்ந்து வரும் இவ்வுலகத்தை உங்களைப்போன்று நானும் பார்க்கிறேன். ஆனால் உங்களால் நேரடியாக பார்க்க முடியாத மறு உலகத்தையும் என்னால் பார்க்க முடிகிறது. அது பற்றி இறைவனின் அறிவிப்பினால் மட்டுமே அறிய முடியும். இவ்விரு உலகத்தையும் நபித்துவம் என்னும் உச்சியில் இருந்து கொண்டு ஒரு சேர பார்க்கும் பாக்கியத்தை நான் அருளப்பெற்றிருக்கிறேன். என்று கூறி அதன்பின் அவர்களை சத்திய இஸ்லாமின் ஏகத்துவத்தின் பால் அழைத்தார்கள். சிலை வணக்கத்தை விட்டு விடுமாறு கூறினார்கள். இறைவனின் இந்த தூதுவ தகவலை புறக்கணித்து வாழுபவர்கள் மரணத்திற்குப் பின் நரக நெருப்பில் வீழ நேரும் என்றும் எச்சரித்தார்கள்.

மனிதனின் ஒரு பலவீனம்

           என்னதான் அறிவுபூர்த்தியான, ஆதாரங்கள் இருந்தாலும், தானும் தன்னுடைய முன்னோர்களும் மதிக்கும், போற்றும்  தெய்வங்களை கண்ணை மூடிக்கொண்டு உறுதியாக நம்பிக்கைக்கொண்டுவிடும் ஒரு பலவீனம் மனிதர்களில் இயல்பாக உண்டு. ஆகவே மனிதன் தனது மூதாதையர்களின் வழிமுறைகளின் மீது உறுதியுடன் நிலைத்திருப்பதையே விரும்புவான். அதற்கு மாறான எந்த தகவல்களைப்பற்றியும் காது தாழ்த்திக்கூட கேட்கவும், ஏற்கவும் மாட்டான்.

தடைகளும், சோதனைகளும்

          இந்த பலவீனத்திலிருந்து மக்கத்து வாசிகளும் விதிவிலக்கானவர்களாக இருக்கவில்லை. நாற்பதாண்டுகளாக, நபியவர்களை உண்மையாளர், நாணயமானவர் என்று முழுமையாக நம்பி மதித்து போற்றி வந்த அம்மக்கள், முஹம்மது(ஸல்) அவர்களை மெய்யை மட்டுமே பேசுபவராக அனு தினமும் பழகி அறிந்து ஏற்றிருந்தும் கூட, அந்த மக்கத்துவாசிகள் நபியவர்களின் ஒரிறை கொள்கை போதனை அறிவிப்புகளை கேட்டமாத்திரத்தில் நபியவர்களுக்கு எதிரிகளாகி விட்டார்கள். நபியவர்கள் எவ்வளவு அதிகம் மக்களை இந்த சத்தியத்தின்பால் அழைத்தார்களோ, அதே அளவில் நபியவர்கள் மீது அம்மக்கள் விரோதம் கொள்ளலானார்கள். மேலும் பலவகைகளிலும் தொல்லைகளையும் கொடுக்க முற்பட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் நல்லுபதேசத்தை ஏற்று இஸ்லாமைத் தழுவிய இறை விசுவாசிகளையும் துன்புறுத்தினார்கள். கடுமையாக அடித்தார்கள், தகிக்கும் மணலில் மட்டுமல்ல தீயில் கூட படுக்க வைத்தார்கள். கழுத்தில் கயிற்றைக்கட்டி தரையில் இழுத்தார்கள். கல்லால் எறிந்தார்கள். எனினும் நபி(ஸல்) அவர்கள் தீங்கு செய்த அம்மக்கள் நேர்வழியைப் பெறுவதற்காக அல்லாஹ்வின் சமூகத்தில் பிரார்த்தனையையே புரிந்துவந்தார்கள். யாரையும் சபிக்கவில்லை. இரவெல்லாம் தன் எஜமானனிடம் இறைதூதை எதிர்ப்பவர்கள் நேர்வழியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமே என்று ஏங்கிதவித்தும் மனமுருகி அழுது பிரார்த்தித்துக் கொண்டும் இருப்பார்கள். 

          ஒரு தடவை மக்காவாசிகள் மீது நம்பிக்கையிழந்து “தாயிப்” என்ற பக்கத்து ஊருக்குச் சென்றார்கள். ஆனால் அங்குள்ளவர்களோ இம்மாமனிதரை பலவகைகளில் அவமதித்தார்கள். மேலும் நபிகளாரின் மீது இளம் வயதுடைய குண்டர்களைத் தூண்டிவிட்டார்கள். அவர்கள் நபியவர்களைத் தீயவார்த்தைகளால் திட்டினார்கள், கற்களை எறிந்து விரட்டினார்கள். அதனால் நபியவர்களின் மேனியில் காயங்கள் ஏற்பட்டு பாதரட்சை வரை இரத்தம் வழிந்து ஓடலாயிற்று. வேதனை தாங்க முடியாமல், நபியவர்கள் எங்காவது சற்று சோர்வுடன் அமர்ந்துவிட்டால், அந்த விவரம் அறியாத போக்கிரிபொடியர்கள் நபியவர்களை உட்காரவிடாமல் மீண்டும் எழ வைத்து ஓட ஓட விரட்டி கற்களால் அடித்துவிரட்டினார்கள்.

         இதே நிலையில் நபியவர்கள், அவ்வூரிலிருந்து வெளியேறி ஒரு திராட்சை தோட்டத்தின் உள்ளே சென்று அமர்ந்தார்கள். தனக்கு தீங்கு செய்த அந்த ஊர் வாசிகளின் மீது நபியவர்கள் சாபமிடவில்லை. மாறாக தன் எஜமானனான இறைவனிடம் “என் இரட்சகா! அவர்கள் உண்மையை அறியாதவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு நேர்வழிக்கான விளக்கத்தைக் கொடு!” என்று தான் உருக்கமாக பிரார்த்தித்தார்கள். இவ்வாறு நபியவர்கள் அந்த பக்கத்து ஊரான தாயிஃப் நகர வாசிகளாலும் துன்புறுத்தப்பட்டார்கள். நபி அவர்களுக்கு நெருக்கடியை தருவதற்காக மக்கா நகர மக்கள் ஒன்று கூடி நபியவர்களையும், அவர்களின் குடும்பத்தார்களையும் ஊர்விலக்கல் செய்தார்கள். அதனால் தாங்க முடியாத தொல்லைகளை மூன்று ஆண்டு காலம் சகித்துக்கொண்டு ஒரு பள்ளத்தாக்கில் வாழ்ந்து வந்தார்கள். கடைசியாக அந்த விரோதிகள் நபி(ஸல்) அவர்களை கொலை செய்துவிடும் நோக்கத்தில் ஒரு இரவு அவர்கள் உரங்கிக்கொண்டிருந்த விட்டை முற்றுகை இட்டனர். 

             இவ்வாறான சூழ்நிலையில் மக்களுக்கு இந்த பரிசுத்த வேதம் என்னும் இறைத்தூதை எத்தி வைப்பதற்காக தங்களின் பிறந்த மண்ணும், பிரியமான ஊரான மக்கா நகரைக்கூட துறந்து அங்கிருந்து வெளியேர வேண்டிய நிலை ஏற்பட்டது. நபியவர்கள் இரவோடு இரவாக தலைமறைவு பிரயாணம் மேற்கொண்டு 300 மைல்களுக்கப்பால் இருந்த மதீனா மாநகர் சென்று விட்டார்கள். அங்கும் மக்காவாசிகள் படைகளை திரட்டிச்சென்று அடிக்கடி நபியவர்களுடன் போரிடலானார்கள்.

உண்மைக்குக் கிடைத்த வெற்றி

      சிறிது கால தாமிதம் ஆனாலும் உண்மைக்கு என்றும், எங்கும் வெற்றிகிடைக்கவே செய்யும். இது உலகியல் நியதியாகும். அதன்படி நபியவர்களுக்கும் வெற்றியேகிட்டியது. நபிப்பட்டம் பெற்று 23 ஆண்டு கால கடும் சிரமத்திற்குப்பின் தங்கள் வாழ்க்கையின் இறுதிகாலத்தில் நபியவர்கள் எல்லா விதத்திலும் வெற்றி பெற்றார்கள். சாத்வீக வெற்றி வீரராக மக்காவில் நுழைந்தார்கள். சத்திய வழியின் பாட்டையில் நபியவர்களின் மாசு மருவற்ற அழைப்பும், உழைப்பும் முழுமையான வெற்றியைப் பெற்றுக்கொண்டுவிட்டது அவர்களின் மறைவுக்கு முன்பே அரபுநாடு முழுவதையும் இஸ்லாமின், இனிய நிழலில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது. மிக குறுகிய காலத்தில் அண்டை நாடுகளில் மட்டுமல்ல முழு உலகிலும், நபி அவர்களின் இப்புனித அழைப்பு ஒரு புரட்சியையே ஏற்படுத்திவிட்டது. சிலை வணக்கமும் ஏக இறைவனுக்கு இணை கற்பித்தலும் தவறானது என்று மக்கள் புறிந்து கொண்டார்கள். வம்ச ஏற்றத்தாழ்வுக்கு இடம் இல்லாத சமத்துவமும், சகோதரத்துவமும் மக்களிடையே மலர்ந்தது. முஹம்மது(ஸல்) அவர்கள் நபிப்பட்டம் பெற்றபின் 23 ஆண்டு குறுகிய கால அவகாசத்தில் அரபுநாட்டு மக்கள் மட்டுமல்ல அண்டை நாட்டினரில் பெரும்பான்மை மக்கள் அனைவரும் ஏக இறைவனையே ஏற்று அவனையே வணங்குபவர்களாகிவிட்டனர்.

இறுதி அறிவுரை

              நபியவர்கள் இறப்பெய்வதற்குச் சில மாதங்களுக்கு முன்பு இறுதி ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக தாங்கள் தங்கி இருந்த மதீனாவிலிருந்து மக்கமா நகர் புறப்பட்டார்கள். இந்த தகவல் அரபகம் முழுவதும் பரவிவிட்டது. இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டிருந்தவர்களில் ஒருலட்சத்து இருபத்து நான்கு ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்காக மக்காவிற்கு வருகைதந்தார்கள். அங்குள்ள அரஃபா என்னும் மைதானத்தில் அம்மக்களுக்கு நபியவர்கள் இறுதி பேருரையை ஆற்றினார்கள். அதில் பின்வருமாறு உபதேசித்தார்கள்... 

      மக்களே! மரணத்திற்குப்பின் இவ்உலக வாழ்வில் ஆற்றிய செயல்கள் பற்றி உங்களிடம் விசாரணை செய்யப்படும், அவ்வாரே என்னைப்பற்றியும், நான் அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாமின் சத்திய தூதை உங்கள் வரை சரியாக எத்தி வைத்து விட்டேனா? என்று உங்களிடம் வினவப்படும்? அப்போது என்னைப்பற்றி என்ன பதிலை நீங்கள் இறைவனிடம் கூறுவீர்கள் என்று அம்மக்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே அங்கு குழுமி இருந்த அனைவரும் ஒரே குரலாக... “சத்தியமாக, நீங்கள் உண்மை மார்க்கத்தை முறைப்படி எங்களுக்கு எத்திவைத்து விட்டீர்கள்” என்று கூறினார்கள்.

        உடனே முஹம்மது (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி விரல்களை உயர்த்தியவர்களாக அல்லாஹ்வே நீயே இதற்கு சாட்சியாக இரு! என்று கூறிவிட்டு அங்கு குழுமி இருந்த மக்களிடம், “இந்த சத்திய மார்க்கத்தை உண்மை என்று அறிந்து ஏற்றுக்கொண்டு இருக்கும் நீங்கள் இங்கு வருகை தந்திராத, மற்றும் இதனை அடையப் பெற்றிராதவர்கள்வரை அதனை கொண்டு சேர்க்க வேண்டும்!” இது உங்களின் கடமை என்றும் வலியுருத்திக் கூறினார்கள்.

       மேலும் நான் இவ்வுலகத்துக்கு அனுப்பப்பட்டவர்களில் இறுதித் தூதராவேன். இனி எனக்குப் பின் வேறு எந்த இறைத்தூதரும் வரமாட்டார். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த இறுதி நபி நானே ஆவேன் என்றும் கூறினார்கள். மேலும் அங்கு வருகை தந்திருந்தவர்களில் யூத – கிருத்துவமதத்தில் இருந்து இஸ்லாமில் சேர்ந்தவர்களும் அதிகம் இருந்தார்கள். அவர்களை முன்னோக்கி என்னைப்பற்றி முன்பு வேதம் கொடுக்கப்பட்டு அதனை படித்துள்ள நீங்கள் நான் உண்மையான இறுதித்தூதராக இருக்கிறேன் என்பதை தெளிவாக அறிந்துள்ளீர்கள் அல்லவா?  அது பற்றி அல்லாஹ் தனது “திருமறையில்” எவ்வாறு கூறுகிறான் என்பதை நினைவூட்டிட கீழ்காணும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். நம்மால் வேதம் கொடுக்கப்பட்டுள்ள (யூத-கிருத்து)வர்கள் அந்த இறை தூதரான முஹம்மது(ஸல்) அவர்களை, தாம் பெற்றெடுத்த பிள்ளைகளை அறிந்திருப்பது போன்று (ஒளிவு மறைவின்றி தெளிவாக) அறிந்துள்ளார்கள். ஆம்! ஐயமின்றி அவர்களில் ஒரு சாரார் சத்தியத்தை மூடிமறைக்கின்றனர் (அல்குர்ஆன் - 2:146) என்று திருக்குர்ஆனில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு மனிதனின் பொறுப்பு

         இறுதி நாள் வரும் வரை இவ்உலகில் வாழ இருக்கும் மனிதர்கள் ஒவ்வொருவரின் பொறுப்பும், அவர்களது மனிதாபிமான கடமையும் யாதெனில், அவர்கள் அந்த ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். அவனுடன் வேறு யாரையும் இணைவைக்கக்கூடாது. அவனால் அனுப்பப்பட்டுள்ள இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை உண்மையான இறைத்தூதர் என்று நம்பி அவர்கள் கொண்டு வந்த மார்க்கம், மற்றும் வாழ்வியல் வழிமுறைகளைக் கடைபிடித்து நடக்க வேண்டும்.

          இதைத்தான் (ஈமான்) இறைவிசுவாசம் என்றும், (இஸ்லாம்) இறைவனுக்கு அடிபணிதல் என்றும் கூறப்படுகிறது. இதனை புறக்கணித்து வாழ்ந்து மரணமடைந்துவிட்டால் அந்த எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கு மாறு செய்தவர்களாகிவிடுவோம். அவனது அதிருப்திக்கு உள்ளாகி நரக வேதனையை அடைய நேரும். இது இறைவனின் வேத அறிவிப்பாகும்.

ஒரு சில கேள்விகளும், அதற்கான தெளிவுகளும்

              இங்கே உங்களின் மனதில் ஒரு சில கேள்விகள் எழலாம்! அதில் முதல் கேள்வி: மரணத்திற்குப்பின்பு உள்ள வாழ்வும், அங்கு சுவனம், நரகம் உண்டு என்பதும் ஐம்புல உறுப்புகளால் உணரவோ, அடையாளம் காணவோ முடிவதில்லையே இதை எப்படி நம்புவது? எங்கனம் ஏற்றுக்கொள்வது என்பதே அந்த கேள்வி...

         இது தொடர்பாக, தெளிவைப்பெருவதற்கு இந்த அளவு விளங்கிக்கொள்வது போதுமானதாகவும், பொருத்தமானதாகவும் இருக்கிறது. அதாவது, அனைத்து முன் வேதநூற்களிலும் சுவனம், நரகம் பற்றிய விபரங்கள் கூறப்பட்டுள்ளன. இதன் மூலம் சுவனம், நரகம் பற்றிய கண்ணோட்டம் எல்லா மதங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று எனத் தெளிவாகத் தெரிகிறது. மேலும் அதனை ஓர் உதாரணத்தின் மூலமும் விளங்கிக்கொள்ள முடியும்.

         ஒரு சிசு, தாயின் கருவில் இருக்கும் போது அதனிடம் நீ தாயின்வயிற்றில் இருந்து வெளியில் வந்தால் ஒரு விசாகமான பூமியை அடைவாய் அங்கு உன் தாயிடம் பால் குடிப்பாய்! அழுவாய்! சிரிப்பாய்! வெளியில் ஏராளமான மனிதர்களையும், பொருட்களையும் பார்ப்பாய்! என்று யாராவது அதனிடம் கூறினால் கருவறையில் இருக்கும் அக்குழந்தைக்கு அதை நம்பக் கூடிய வாய்ப்பு இருக்க முடியாது. எனினும் கருவறையிலிருந்து வெளியில் வந்த உடனேயே இதுவெல்லாம் அதன் முன் காணப்படும் எதார்த்தங்களாகவே இருக்கும்.

      அது போன்று தான் மறு உலகத்தை முன்வைத்து பார்க்கும் போது இந்த உலகம் முழுவதும் ஒரு கருவறையின் நிலைக்கு ஒப்பானதைப் போன்றே இருக்கிறது. மரணத்திற்குப்பின் (இங்கிருந்து) வெளியேறிடும் மனிதர்கள் மறு உலகில் தான் தங்களின் கண்களைத் திறக்க இருக்கிறார்கள். அந்த மறுஉலக வாழ்க்கையைப்பற்றி இறைத்தூதர்களான நபிமார்களாலும், இறைவனால் அவர்கள் மீது அருளப்பட்ட வேதங்கள் மூலமும் அறிவிக்கப்பட்டவைகளை யெல்லாம் அங்கு தன் முன் நிகழ்வானவைகளாக இருப்பதைக் கண்டு திகைப்படைவார்கள்.

       அங்கு நமக்காக தயாரிக்கப்பட்டிருக்கும் சுவனம், நரகம் இன்னும் இதர யதார்த்தங்கள் பற்றிய உண்மைகளை புறக்கணித்து சிரிது கூட ஆய்வு செய்யாமல் இவ்வுலகில் மனமுரண்டாக வாழ்ந்து மரித்த பரம எதிரியால் கூட அதனை மறுக்க முடியாது திடுக்கிட்டு போய்விடுவார்கள். பிரத்தியட்சமான இந்த உண்மைகளைத்தானே உலகில் நாம் வாழ்ந்திருந்த போது இருதியான இறைத்தூதர் அவர்கள் நமக்குக் கூறியிருந்தார்கள் என்றும் மேலும் பரிசுத்த இறைவேதமான குர்ஆனும் அவற்றைத்தானே நமக்கு அறிவித்திருந்தது என்றும் கண்கூடாகக் கண்டு உறுதிபடுத்திக் கொள்வார்கள். மேலும் அவ்வனைத்தையும் தங்களின் முன்பு பிரத்தியட்சமாக காணும் போது உண்மையானது தான் என்று தங்களையும் அறியாமல் வாய்விட்டு கதரியவர்களாக கூறுவார்கள். இந்த சத்தியத்தின் சாயலை மரணவாசலில் மனிதர்கள் நுழைந்த மறுவினாடியே தங்களின் கண்ணால் காண்பார்கள். அதனை அப்போதே மனம் திறந்தும் ஒப்புக் கொண்டுவிடுவார்கள் என்று இறைமறை குர்ஆன் கூறுகிறது.

இரண்டாம் கேள்வி

       உங்களின் மனதில் உறுத்தலை ஏற்படுத்தும் மற்றொரு விஷயம்: எல்லா இறைத்தூதர்களும், மதங்களும் இன்னும் மதவேதங்களும் உண்மையாக இருந்தன எனில், அவைகளை யெல்லாவற்றையும் விட்டுவிட்டு இஸ்லாமை ஏற்க வேண்டும் என்ற அவசியம் என்ன?

      இன்றைய உலகில் இதற்குரிய பதில் முற்றிலும் இலகுவானது. நமது ஜனநாயக நாட்டின் நிறுவகிப்புக்காக ஒரு பாராளுமன்றம் உள்ளது. நமக்கென்று ஓர் அரசியல் சாசன சட்டமும் நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் உருவாக்கப்பட்டும் உள்ளது. இதுவரை பதவி வகித்த பாரத பிரதமர்கள் அனைவரும் உண்மையில் அந்த அரசியல் சட்டத்தை முன் நிறுத்தியே நாட்டின் ஆட்சியையும், சட்ட – ஒழுங்கையும் நடைமுறைபடுத்திவந்தார்கள்.

       பண்டிட் ஜவஹர்லால் நேரு, லால் பஹதூர் சாஸ்திரிஜீ, இந்திராகாந்தி, சரண்சிங், ராஜீவ்காந்தி, வி.பி.சிங், வாஜ்பாய் போன்றபிரதமர்களின் காலத்தில் நாட்டின் தேவைக்கேற்பவும் காலத்தின் அவசியத்திற்கேற்பவும் அப்பிரதமர்கள் தலைமையில் பலசட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறான சட்டங்களும், திருத்தங்களும் அந்தந்தகால கட்டங்களில், பாரத நாட்டின் சட்டங்களாகவே நடைமுறையில் இருந்துவந்தன என்பதும் உண்மையே. எனினும் தற்போதைய பிரதமர் தனது கேபினேட் அமைச்சர்கள் மற்றும் பார்லிமெண்ட்டின் மூலம் ஒரு சட்டத்தை புதிதாக கொண்டுவர முடிவு செய்கிறார்கள். அவ்வாறு அவர்களால் கொண்டுவரப்படும் திருத்தங்களால் முந்தைய சட்டங்களில் மாற்றத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றிவிட்டால் பழைய சட்டங்கள் நடைமுறையில் இல்லாமல் ஆகிவிடுகிறது. இந்தியக் குடிமகனாக இருக்கும் ஒவ்வொருவரின் மீதும் திருத்தப்பட்ட இந்த புதிய சட்டத்தை ஏற்பதும் அதன் படி செயல்படுவதும் தான் அவசியமாகிவிடும்.

     ஒர் இந்தியக்குடிமகன் – லால் பகதூர் சாஸ்திரி, அல்லது திருமதி இந்திராகாந்தி காலத்தின் சட்டங்களை மட்டுமே நான் ஏற்பேன். இப்போதுள்ள பிரதமரின் காலத்தில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தை நான் ஏற்க மாட்டேன். இச்சட்டங்களின் படி விதிக்கப்படும் வரியை நான் செலுத்த மாட்டேன் என்று ஒருவர் கூறினால், செயல்பட்டால் நாட்டின் தற்போதைய சட்டங்களை புறக்கணித்த காரணத்தால் அத்தகைய மனிதர்களை “தேசவிரோதி” என்று அரசாங்கம் கருதும். அவர் தண்டிக்கப்பட வேண்டியவர் என்பதை நீதிமன்றங்களும் உறுதிபடுத்தும்.

     அவ்வாறே எல்லா மதங்களும், மதவேதங்களும், சட்டதிட்டங்களும் அந்தந்த காலத்திற்கேற்ப ஏக இறைவன் அல்லாஹ்வினால் தான் அருளப்பட்டுவந்தன. எல்லாமே சத்தியத்தின் போதனைகளாகவே தான் அப்போது வழக்கில் இருந்து கொண்டிருந்தன. எனினும் இறுதித்தூதராக முஹம்மது நபியவர்கள் அனுப்பட்டுள்ளார்கள். இப்போது முன்பு வருகைதந்திருந்த எல்லா இறைத் தூதர்களையும், அவர்கள் மூலம் அருளப்பட்ட மத வேதங்களையும் உண்மையானவை என்று ஏற்றுக்கொள்வதுடன் இறுதியாக அனுப்பப்பட்டுள்ள இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களையும் அவர்களின் மூலம் அருளப்பட்டுள்ள சட்டங்களை நம்புவதும், அவர்களின் மூலம் கடைசியாக இறக்கிவைக்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் வேதத்தை ஏற்றுக்கொள்வதும் அவர்களின் மீது இறக்கிவைக்கப்பட்டுள்ள வழிகாட்டல் படியான மார்க்க சட்டங்களின் படி செயல்படுவதுமே ஒவ்வொரு மனிதரின் மீதும் கட்டாயமாகவும் அவசியமாகவும் இருக்கிறது.

 சத்திய மார்க்கம் ஒன்றே ஒன்று தான்

          மதங்கள் பலவாக இருந்தாலும் அவை அனைத்துமே இறைவனின் பால் இட்டுச் செல்லும் நதிகளாக இருக்கின்றன. நதிகள் தான் வெவ்வேறு, சென்றடையும் இடம் கடல் ஒன்று தான் என்று உதாரணம் சொல்லி தற்போதுள்ள மதங்கள் அனைத்தையும் சரியானவைகள் தான் என்று சொல்வது எவ்விதத்திலும் பொருந்தாது. ஏனெனில் உலகில் உள்ள பெரிய நதிகள் அனைத்தும் கடலில் கலக்கும் வகையில் அமையப்பெற்றிருக்கின்றன என்பது உண்மையே. எனினும் எத்தனையோ நதிகள் கால மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வரண்டு போய்விட்டன. இன்னும் சில நதிகள் கால ஓட்டத்தில் கழிவு நீர்கலப்பால் மாசடைந்து போய் இருக்கின்றன. அது போன்றே இன்றைய உலகில் உள்ள மதங்களின் நிலை பல்வேறு காரணங்களால் தனது பரிசுத்த அமைப்பில் இருந்து மாற்றமடைந்து போய் விட்டிருக்கின்றன. ஏனெனில் கிருத்துவம் உட்பட அனைத்து மதங்களிலும் ஏக இறைவனுக்கு ஏதோ ஒரு வகையில் இணை கற்பிக்கப்படும் மாசுகலந்த நிலைகளையே அவைகளில் காண முடிகிறது. இதுவே எதார்த்தமாகும். ஆகவே உண்மை ஒன்று தான் இருக்கமுடியும். பொய்கள் பலவாக இருக்கலாம். ஒளி ஒன்று தான் இருக்கும் அது இருள் அனைத்தையும் நீக்கி வெளிச்சத்தை ஏற்படுத்திட அந்த ஒரே ஒரு ஒளியே போதுமானதாக இருக்கிறது.

      சத்தியமார்க்கம் என்பது இறைவன் ஒன்றே ஒன்று தான் என்ற அடிப்படைக்கொள்கையைக் கொண்டதாகும். ஆதிபிதா ஆதம்(அலை) முதல் அருளப்பட்ட அனைத்து மார்க்கங்களும் ஓரிறைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டவைகளாகவே இறைவனால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த ஒருவனை மட்டுமே நம்பி ஏற்றுக்கொள்வது, மேலும் அந்த ஒருவனுக்கு மட்டுமே வழிபடுவது என்பதும் தான் கலப்பற்ற இறை கோட்பாடாகவும், பரிசுத்தமான இறைக்கொள்கையாகவும் இருக்க முடியும். அக்கொள்கையைத் தான் இஸ்லாம் தனது ஜீவாதாரக்கொள்கையாக கொண்டுள்ளது. இந்த அடிப்படை தத்துவம் எப்போதும் மாறுவதற்கோ, மாற்றப்படுவதற்கோ உரியது அல்லவேஅல்ல. ஆனால் முற்காலத்தில் வணக்கத்தை நிறைவேற்றிடுவதற்காக இருந்துவந்த அமைப்பு முறைகளும், வாழ்வியலில் செயல்படுத்தப்படும் வழிமுறை நியதிகளும் மட்டுமே காலத்திற்கேற்ப மாறிக்கொண்டிருந்தன. மேலும் அதுவும் கூட அந்தந்தகாலத்தில் அந்த ஏக எஜமானன் அருளித்தந்த வழிமுறைகளின்படி தான் நிகழ்ந்தன. இவ்வுலகின் இறுதிகாலம்வரை வாழ இருக்கும் மனித இனத்தின் எஜமானனான இரட்சகன் ஒருவன் தான் என்று உறுதிபடுத்தப்பட்ட பின்பு அவனது திரு பொருத்தத்திற்கு ஏற்புடைய பாதையும் ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கமுடியும்.

       இதைத்தான் திருக்குர்ஆன்: அல்லாஹ்வின் (ஏற்பிற்குறிய) மார்க்கம் என்பது இஸ்லாம் மட்டுமே. என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளது. (அல்குர்ஆன்-3:19)

மூன்றாவது கேள்வி?

        முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் உண்மையான சத்தியதூதர். மேலும் அவர்கள் தான் உலகின் இறுதித்தூதர் என்பதற்குரிய ஆதாரம் என்ன? என்ற கேள்வியும் மனதில் தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டு. இதற்கு தெளிவான பதிலாவது...

     முதலாவதாக. குர்ஆன் இறைவனின் வேதவசனம். அதன் பரிசுத்த சத்தியத்தன்மையைப்பற்றி, நடுநிலை நின்று ஆய்வு செய்த அனைத்து அறிவியல் அறிஞர்களும், மொழி வல்லுனர்களும் அதன் சிறப்பை உணர்ந்து உண்மை வேதம் தான் என்று ஏற்றுக்கொண்டுள்ளனர். குர்ஆனில் கூறப்பட்டுள்ள மனித அறிவுக்கு ஏற்புடைய பல நூறு அறிவியல் தகவல்களும், ஆதாரங்களும் விஞ்ஞான உலகால் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. மெய்ப்பிக்கப்பட்டும் வருகிறது. குர்ஆனின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உலகியல் ரீதியில் உண்மையானவைகளாகவும் அங்கீகரிக்கப்பட்டவைகளாகவும் இருந்து வருகின்றன. அது போன்றே இன்றுவரை அதன் ஒரு சிறிய அத்தியாயத்தைப் போன்று உருவாக்கிக்காட்டிடும்படி குர்ஆன் அறிவித்திருக்கும் அந்த சவாலைக்கூட இதுவரை முறியடிக்கயாராலும் முடியவில்லை. இதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது தெள்ளத்தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. இது இறைவேதம் தான் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட பின் அதன் மூலம் கூறப்படும் அத்தனைத்தகவல்களும் ஏக இறைவனின் உண்மையான அறிவிப்பே என்பதும் உறுதியாக்கப்பட்டுவிட்டது. அப்படிப்பட்ட குர்ஆனின் அறிவிப்புகளில் முதன்மையானது முஹம்மது(ஸல்) அவர்கள் இறைதூதுவர் என்பதுமாகும்.

       இரண்டாவதாக, முஹம்மது(ஸல்) அவர்களது வாழ்வின் ஒவ்வொரு பகுதியும், உலகின் முன் தெளிவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களின் புனிதம் நிறைந்த முழு வாழ்க்கை வரலாறும் திறந்த புத்தகமாக ஆக்கப்பட்டு மக்களின் முன் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. உலகின் எந்த மனிதரின் வாழ்வும் நபியவர்களின் வாழ்வு போன்று முழுமையாக பதியப்பட்டதாக ஆகி இருக்கவில்லை. அவர்களின் அங்க அடையாளங்கள் மட்டுமல்ல தலையிலும், தாடியிலும் எத்தனை ரோமங்கள் நரைத்து வெண்மையாக இருந்தன என்பது கூட பதியப்பட்டுள்ளது.

           நபியவர்களின் எதிரிகள், மற்றும் இஸ்லாமின் விரோதிகளான வரலாற்று ஆய்வாளர்கள் கூட, முஹம்மது(ஸல்) அவர்கள் தங்களின் சொந்த வாழ்வில், எப்போதும், பொய்யுரைத்ததாகவோ, நம்பிக்கை – நாணயத்தில் மாறு செய்ததாகவோ ஒரு போதும் சொல்லவில்லை. நபியவர்களின் நபித்துவத்தகவலை ஏற்கமறுத்த ஊர்வாசிகள் கூட நபியவர்களின் வாக்கின் பரிசுத்தத்தன்மை மற்றும் நம்பிக்கை, நாணயம் பற்றி உண்மையானதென்றே சத்தியமிட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இன்றைய உலகின் நேர்மையான ஆய்வாளர்களும் அவ்வாறு தான் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். சென்ற (2000) நூற்றாண்டின் இறுதியில் வர்ஜீனியா(அமெரிக்கா)வைச் சேர்ந்த மைக்கேல் ஹெச். ஹார்ட் என்ற சரித்திர ஆய்வாளர் (THE HUNDRED) “நூறு பேர்” என்ற பெயரில் ஒரு நூலை தொகுத்து வெளியிட்டார். அதன் முகப்புரையில் தமது தொகுப்பாய்வுக்கு அவர் தேர்வு செய்தது “வரலாற்றின் போக்கில் பெரும் மாறுதல்களையும், தாக்கத்தையும் உண்டு பண்ணும் அளவுக்கு மிகப்பெரும் செல்வாக்கும் வல்லமையையும் பெற்றிருந்தவர்கள் யார் யார்? என்பதை அளவுகோலாக நிர்ணயித்து ஆய்வு செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமது ஆய்வுக்காக கிமு 3500 ஆம் ஆண்டில் வாழ்ந்திருந்தவர்களில் துவங்கி, கி.பி.1990 முடிய வாழ்ந்த முக்கிய 100 பேர்களை முன்வைத்து ஆய்வையும் தேர்வையும் செய்துள்ளார். மேலே குறிப்பிடப்பட்டுள்ள தனது அளவு கோலை முன்வைத்து வரிசைப்படுத்தியுள்ளார். ஏசுகிருஸ்துவுக்கு அதில் 3ஆம் இடத்தையும், மோஸஸ் அவர்களுக்கு 15வது இடத்தையும் வழங்கியுள்ள  அவர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு அந்த 100 பேரில் முதல் இடத்தை வழங்கியுள்ளார். இது ஒருசிறிய எடுத்துக்காட்டாகும். இந்த நூலின் ஆசிரியர் இஸ்லாமியர் அல்ல.   

    நபியவர்கள் தங்களின் சொந்த வாழ்வில் ஒருபோதும் பொய்யுரைக்காதவர்கள். அந்த சிறந்த மனிதர், மார்க்கத்தின் பெயரால், இறைவனின் பெயரால் பொய்யுரைக்க எப்படி துணிவார்? ஒருதகவலை பிறர் கூற அதனை நம்புவதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும் இரண்டுவிஷயங்கள் அவசியமானதாக கருத்தில் கொள்ளப்படுகிறது. ஒன்று அந்த தகவலைக்கூறுபவர் ஒருபோதும் பொய் பேசாதவராக அறியப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறே அவர் நாணயம்மிக்கவர் என்பதை அனுபவப்பூர்த்தியாக உணரப்பட்டிருக்க வேண்டும். இவ்விரு சிறப்புகளை நபிகளார் தமது இளமைப்பருவத்திலிருந்தே பெற்று இருந்தார்கள் என்பதை அவர்களின் நபிப்பட்டத்திற்கு முந்தைய நாற்பது ஆண்டுகால நீண்ட நெடிய கால வாழ்வும், அவ்வாறே அவர்கள் வாழ்ந்திருந்ததை மக்கத்து மாநகரவாசிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நன்கு அறிந்தும் ஏற்றுக்கொண்டும் இருந்தார்கள். அவ்வாரான வாய்மையின் ஒட்டுமொத்த உருவமாக திகழ்ந்த முஹம்மது(ஸல்) அவர்கள் தான், “நான் இறுதித்தூதராவேன், எனக்குப்பின் இனி எந்த தூதரும் வரமாட்டார். என்று கூறினார்கள். அவ்வாரே அவர்களுக்குப்பின் வேரு ஒரு நபிவருவார் என்பது பற்றிய எந்த முன்னறிவிப்பும் முன்வேதங்களில் செய்யப்படவில்லை” என்றும் முஹம்மது(ஸல்) அவர்களே தெளிவுபடுத்தியும் உள்ளார்கள்.

             அதுமட்டுமல்ல சகல மத வேதங்களிலும், கூறப்பட்டுள்ள “இறுதி ரிஷி” “கல்கி அவதாரம்” பற்றிய முன்னறிவிப்பும், அடையாளங்களும், முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மட்டுமே முழுமையாகப் பொருந்துகின்றன. நபி(ஸல்) அவர்களுக்கு முன்பு – மோஸஸ் (மூஸா(அலை) – இயேசு கிறிஸ்த்து (ஈஸா(அலை) போன்ற நபிமார்கள் தோன்றி இருந்தார்கள். இன்றளவும் அவர்களை பின் பற்றி வாழும் மக்கள் சமூகம் நிலைத்தும் இருக்கிறது. இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்குப்பின் சில பொய்யர்கள் தங்களை நபி என்று பிதற்றிக்கொண்டார்கள். ஆனால் மிக குறுகிய காலத்தில் அவர்களும் அவர்களைப் பின்பற்றிய சிறிய கூட்டத்தினரும் அடையாளம் கூட இல்லாமல் அழிந்து போய்விட்டனர். இதுவும் கூட முஹம்மது(ஸல்) அவர்கள் இறுதி நபி என்பதை உறுதிபடுத்துவதற்கு போதுமான சான்றாகவே இருந்து வருகிறது.

பண்டிட் வேத பிரகாஷ் அபாதியாயேயின் தீர்ப்பு

       பண்டிட் வேதபிரகாஷ் அபாதியாயே தனது நூலில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார். இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாதவனும், ஹளரத் முஹம்மது(ஸல்) அவர்களையும், அவர்களின் மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்ளாதவனும் – இந்துவும் அல்ல. ஏனெனில், இந்துக்களின் மத நூல்களில் முஹம்மது(ஸல்) அவர்களை “மஹாமத்” என்றும் “கல்கி அவதாரம்” இன்னும் “நராஷுனஸ்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலுள்ள அங்க அடையாளங்கள் முஹம்மது நபி அவர்களுக்கு மட்டுமே முற்றிலுமாக பொருந்தக்கூடியதாக ஆகி இருக்கிறது. இறுதிகாலத்தில் அவர்கள் இந்த பூமியில் அவதரித்த பின் அவர்களையும், அவர்களின் மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தங்களின் வேதங்களில் அறிவிக்கப்பட்டிருப்பதாக அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

             எனவே தமது மதநூல்களின் மீது நம்பிக்கை கொண்டுள்ள எந்த இந்துவும் முஹம்மது நபி அவர்களை ஏற்றுக்கொள்ளாவிடில் தங்களின் வேத அறிவிப்பையே புரக்கணித்தவர்களாகத்தான் கருதப்படுவார்கள். மேற்படி பண்டிட் அவர்களின் அறிவிப்புப்படி முஹம்மது நபி(ஸல்) அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் இறக்கக்கூடியவர்கள் தங்கள் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்வில், நரக நெருப்பின் வேதனையை அடைய நேரும் என்பதும், மேலும் அங்கு இறைவனின் தரிசனம் கிடைக்காது போவதுடன், இன்னும் இறைவனது கோபத்திற்குரியவர்களாக நேரும் என்பதும் இதன் மூலம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

இறை விசுவாசத்தின் அவசியம்!

             மரணத்திற்குப்பின் உள்ள வாழ்வு என்பது ஒரு புறம் இருக்க, இந்த உலகிலும் கூட (ஈமான்) ஓரிரை இறைவிசுவாசமும், இன்னும் (இஸ்லாம்) போதிக்கும் ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சகோதரத்துவ வாழ்வியல் வழிகாட்டல்கள் அனைத்தும் மிக்க சிறப்பானவைகளாகவே இருக்கின்றன. உலகமக்கள் தங்களுக்கிடையில் அன்பாகவும், அமைதியாகவும் வாழ்ந்திட அவை அனைத்தும் நமக்கு அவசியத் தேவையானவைகளாகவே இருக்கின்றன. மேலும் ஓரே இறைவனை வணங்குவது தான் மனிதனின் முதன்மையான கடமை. அவனது சந்நிதானத்தை விட்டுவிட்டு, வேறு யாரின் முன்பும் தலைதாழ்த்திடுவது என்பது தனது உயர்வை தன்னைவிட தரம்தாழ்ந்த கீழான படைப்புகளுக்கு முன்னால் தானே தாழ்த்திக் கொள்ளக்கூடியதற்கு மறுபெயராகும். சாதாரணமாக நன்றியுள்ள ஒரு நாயும் கூட தன்னை விட உயர்வான – தனக்கு உணவையும் – வாழ்வையும் அளிக்கும் வல்லமையுள்ள தன் எஜமானின் கட்டளைகளுக்கு மட்டுமே முற்றிலும் பணிந்தும் செயல்படுகிறது. நன்றியுடன் நடந்துகொள்கிறது. அவனுடைய வாசலில் மட்டுமே தனது தேவைகளுக்காக எதிர்பார்த்து காத்தும் கிடக்கிறது. 

        ஆனால் ஆறு அறிவு உள்ள மனிதன் தன் சத்திய எஜமானனை மறந்துவிட்டு, பிறரின் வாசல் வாசலாக தலை தாழ்த்தி திரிகிறான் என்றால் அவன் தன் அந்தஸ்த்தையும் உணரவில்லை. தனது வணக்கத்திற்காக அவனால் தேர்வு செய்யப்பட்டுள்ள தவறான தெய்வங்களின் தரத்தையும் அறியாத வனாகவே இருக்கிறான். எனினும் இறந்த பின்பே இந்த தவறுக்காக மிக்க கைசேதப்பட இருக்கிறான் என்பது திண்ணம். ஏனெனில் ஓரிறை விசுவாசத்தின் பலாபலன்களையும் அதன் அதிகபட்ச தேவைகளையும், மரணத்திற்குப்பின் உள்ள வாழ்வில் தான் பிரத்தியட்சமாக உணரப்பட இருக்கிறது. ஆனால் இறந்துவிட்ட பின் அங்கு தனது தவறை உணரும் மனிதன் அங்கிருந்து மீண்டும் உயிர்பெற்று இவ்வுலகத்திற்கு திரும்பி வந்து பிராயச்சித்தத்தை தேடிக்கொள்ளவும் முடியாது. அங்கு அனுபவித்துக் கொண்டிருக்கும் கடும் வேதனையை முடிவுக்குக் கொண்டுவர அங்கு மரணத்தை விரும்பி அழைத்தாலும் கூட அவனை மரணம் தழுவாது. அந்நேரம் அவன் உலகில் இணைவைத்த தனது பாவத்தை எண்ணி எண்ணி எவ்வளவு கை சேதப்பட்டாலும் அது எந்த பலனையும் தராது. மனிதன் இங்கிருந்து இந்த (ஈமான்) ஓரிரைக் கொள்கை என்னும் இறைநம்பிக்கையின்றி சென்று விட்டால், நிரந்தரமாக நரகில் எரிய நேரிடும். இதைவிட ஈடு செய்திட முடியாத கைசேதம் வேறு எதுவும் இருக்கவே முடியாது.

              இந்த உலக நெருப்பின் ஒரு சிறு பொறி நம் உடலில் பட்டு விட்டால், நாம் எப்படி துடி துடித்துப்போகிறோம் அப்படி இருக்க நரக நெருப்பின் வெங்கொடுமையை எப்படி தாங்க முடியும்? அது இந்த உலக நெருப்பை விட எழுபது மடங்கு கடும் உஷ்ணமானது. அதில் நிரந்தரமாக எரிந்து கொண்டிருக்க நேரிடும். மேனியின்மேல் உள்ள தோல் எரிந்து கரிந்து விட்டால் கூட வேறு ஒரு தோல் உடனுக்குடன் மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கும். இப்படியே தொடர்ச்சியாக இந்த தண்டனையை ஏக இறைவனை மறுத்த பாவிகள் அனுபவித்துக்கொண்டே இருக்க நேரிடும். இவை அனைத்தும் இறுதிவேதமாம் குர்ஆனின் அறிவிப்புகளே ஆகும்.

அன்பிற்கினிய வாசக நேயர்களே உங்களிடம் மன்றாடி கெஞ்சுகிறேன்.

       எனது அன்பிற்கினிய வாசக நேயர்களே! மரணம் எப்போது வரும் என்று தெரியாது. உள்ளிழுத்த சுவாசம் வெளிவருவது பற்றியும் நிச்சயமில்லை. வெளியில் விட்ட மூச்சு உள்ளே செல்லும் என்பதற்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை. மரணம்வருவதற்கு முன்பு நாம் பெற்றிருக்கும் அவகாசத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகவே இப்போது இப்பூஉலகவாழ்வில் நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இப்போதைய நமது வாழ்வில் முதன்மையான விஷயம் ஏக இறைவனை விசுவாசம் கொள்வதே ஆகும். ஆகவே நம்முன் உள்ள இந்த மிகமுக்கியமான பொறுப்பையும், கடமையையும் அலட்சியம் செய்யாதீர்கள். இதனை உணர்ந்து கொள்ளுங்கள்! ஈமான் இன்றி எவ்வளவு தான் சுக போகமாக இவ்வுலகில் வாழ்ந்தாலும் இந்த வாழ்வு வெற்றி வாழ்வல்ல. முழுமையான வாழ்வும் அல்ல. அவ்வாறே மரணித்த பின் உள்ள நமது மறு உலக வாழ்வும் மகிழ்வான வாழ்வாக அமையாது.

      நாளை நாம் எல்லோரும் நமது எஜமானின் சன்னதியில் செல்ல வேண்டியவர்களாகவே இருக்கிறோம். அங்கு முதன்மையாக ஓரிரைக்கொள்கை என்னும் “ஈமானைப் பற்றித்தான் விசாரணை செய்யப்படும்.” ஆகவே பாவியான நான் மிக்க கவலையை மனதில் கொண்டவனாக கடமை உணர்வால் உந்தப்பட்டு இந்த நல்ல தகவல்களை இச்சிறிய ஏட்டின் மூலம் தங்கள் வரை சேர்த்து இருக்கிறேன். இதில் எனக்கென்று எந்த சுயநலமும் இல்லை. நம் அனைவருக்கும் பொதுவான அந்த ஏக இறைவனின் உத்தரவையும், மனித குலம் அனைத்திற்கும் வழிகாட்டியாக அனுப்பப்பட்டுள்ள அவனது தூதுவர் நபி(ஸல்) அவர்களின் கட்டளையையும் முன்வைத்தே இதனை நான் உங்கள் முன் சமர்ப்பித்துள்ளேன். அவன் நம் அனைவருக்கும் பொதுவானவன். அவனது வேதமான திருக்குர்ஆனும் மனித குலத்தைச் சேர்ந்த நம் அனைவருக்கும் பொதுவானது. இது நாள் வரை தங்கள் வரை இதனை எத்திவைக்கத் தவறியதற்காக வருந்துகிறேன். எங்களுக்கு இந்த உண்மை எத்திவைக்கப்படவே இல்லை என்று, மறுமை விசாரணை நாளன்று நீங்கள் என் மீது குறை சொல்லிவிடக் கூடாது என்ற (வேதனை நிரம்பிய) கவலையின் வெளிப்பாடே இச்சிறிய நூல். மேலும் இந்த உண்மையான தகவல்களை நீங்கள் தெறிந்திருந்தும் அது பற்றி தெறியாதவர்களுக்கு ஏன் அறிவிக்கவில்லை என்று நமது எஜமானன் கண்டித்து விடக்கூடாதே என்ற நடுக்கம்மிக்க, உந்துதலின் வெளிப்பாடுமே ஆகும்.

          இந்த சில சத்திய வரிகள் உங்கள் மனதில் தெளிவை ஏற்படுத்தி உள்ளத்தில் இந்த உண்மை கருத்துகள் சரியானவை தான் என்று இடம் பிடித்திருக்கும் என நம்புகிறேன். அப்படியானால் வாருங்கள் கண்ணியவான்களே! பரிசுத்தமான இதயத்தையும், தூய ஆத்மாவையும் பெற்றுள்ள என் பிரிய நண்பர்களே! அந்த உண்மை எஜமானனையே சாட்சியாக்கி, இதயங்களின் நிலையை அறிபவனாகிய ஏக இறைவனான அந்த அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளும் விதமாக கலப்பற்ற உள்ளத்துடன் முன்மொழியுங்கள்! வாக்களியுங்கள்!

“அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு”

பொருள்: (ஏக இறைவனான)அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை, துணை யாருமில்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் உண்மை அடியாரும் இறைத்தூதருமாக இருக்கிறார்கள் என்றும் சாட்சி கூறுகிறேன். நான் இறை நிராகரிப்பிலிருந்து, விலகிவிட்டேன். மேலும் அல்லாஹ்வுடன் வேறுயாரையும் இணை வைப்பதிலிருந்தும் என்னை நீக்கிக்கொண்டுவிட்டேன். இன்னும் சகல பாவங்களிலிருந்தும் மன்னிப்பைத்தேடி (தவ்பா) பாவமீட்சி பெறுகின்றேன்.

       மேலும் என்னைப் படைத்த சத்திய எஜமானின் அனைத்து சட்டங்களையும் ஏற்கிறேன். அவனது சத்திய தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் வழிகாட்டல்களுக்கு உண்மையாகக் கட்டுப்பட்டு வாழுகிறேன்! என்று உறுதிபட கூறுங்கள். அன்பாளன், கருணையாளனாகிய எஜமானன், என்னையும், உங்களையும் இறுதி மூச்சு வரை அவனுக்கு உகப்பான இந்த சத்திய பாதையில் நிலைத்திருக்கச் செய்வானாக!

      என் அன்பு சகோதர, சகோதரிகளே! நீங்கள் உங்கள் மரணம் வரை இந்த ஈமான் இறை நம்பிக்கையுடன் உங்கள் வாழ்வைக் கழித்து வந்தீர்களானால், உங்களின் இந்த சகோதரன் உங்களின் ஈருலக மேன்மைக்காக எப்படிப்பட்ட பாக்கியம் நிறைந்த உயரிய அன்பின், கடமையை ஆற்றியுள்ளான் என்பதை இறப்புக்குப் பிறகு தான் முழுமையாக தெரிந்து கொள்வீர்கள். அதனை பிரத்தியட்சமாக அப்போது உணருவீர்கள். எல்லையற்ற உயர்வுகளை அங்கு அனுபவிப்பீர்கள்.

இனி உங்களின் கடமை

      இன்னொரு விஷயத்தையும், உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். ஈமான் இன்னும் இஸ்லாம் என்ற இந்த சத்தியம், இதுவரை யாருக்கெல்லாம் கிடைக்கவில்லையோ, அந்த சகோதரர்களுக்கும் இது சொந்தமான உரிமையாகவும், உடமையாகவும் இருக்கிறது என்பதையும் நீங்கள் உங்கள் மனதால் எண்ணிப்பாருங்கள். நீங்கள் பெற்றுக்கொண்டிருக்கும் இம்மாபெரும் பாக்கியத்தை அவர்களும் பெற்றுக்கொள்ள வேண்டுமே என்ற ஏக்கத்துடன். செயல்பட முற்படுங்கள். அவர்களும் நேர்வழியைப் பெற துஆ(பிரார்த்தனை) செய்துவாருங்கள்.

      எந்த ஆதாய நோக்கமும் இன்றி, தூய்மையுடன் தம் சகோதரர்களின் மீதுள்ள அக்கறையின் அடிப்படையில், எஜமானனான ஏக இறைவனின் கோபம், நரக நெருப்பு, இன்னும் அவனின் தண்டனையிலிருந்து அவர்களையும் காப்பாற்றிட வேண்டும் என்ற கவலை தோய்ந்த உள் உணர்வுடன் செயல்பட வேண்டும். இறைத்தூதர் அவர்களின் இந்த சத்தியத்தை நான் உங்களிடம் எத்திவைத்தது போன்று, நீங்களும் இது பற்றி அறிந்திராத பிறரிடம் எத்திவைப்பது உங்கள் மீதுள்ள கட்டாயக்கடமையாக கருதிட வேண்டும். அத்துடன் அவர்களுக்கு இந்த சத்திய பாதை பற்றிய பிரத்தியட்ச உண்மைகளை சரியாக விளங்குவதற்காக மனம் உருகி எஜமானிடம் பிரார்த்தனையும் செய்துவர வேண்டும்.

         ஒரு குருடர் அவரால் பார்க்க முடியாத காரணத்தால் பாழும் கிணற்றிலோ, அல்லது நெருப்புக்குண்டத்திலோ விழ இருக்கிறார். அது உங்கள் முன் நிகழ்கிறது. அதைக்காணும் நீங்கள் அந்தபார்வை இல்லாதவர் நடந்து செல்லும் அந்த பாதை நெருப்புக்குண்டம் அல்லது பாழும் கிணற்றை நோக்கிச் செல்கிறது என்று எச்சரித்து தடுக்க வாய் திறந்து ஒரு சொல்லைக்கூட சொல்லாவிட்டால் உங்களை யாரும் மனிதாபமுள்ள மனிதன் என்று சொல்லமாட்டார்கள். அவனைத் தடுப்பதும், ஓடிவந்து பிடித்துக்காப்பாற்றுவதும் தான் உண்மையான மனிதாபிமானமாகும். நமது நல்ல நோக்கத்தை உணராது நம்மை அவர் புறக்கணித்தால் கூட “எனக்கு சக்தி இருக்கும் வரை உன்னை நெருப்பில் அல்லது கிணற்றில் விழ விடமாட்டேன்” என்று உறுதியாகக் கூறி செயல்படுவது அல்லவா மனிதப் பண்பு...! 

ஏக இறைவனான அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டபின்...

       ஒருவருக்கு இறை மார்க்கமும், இறைத்தூதரும், இறை வேதமாம் குர்ஆனின் நேர்வழியும் கிடைத்து அவர் ஈமான் கொண்டுவிட்டார். இவ்வாறு முஸ்லிமாக ஆகிவிட்ட ஒவ்வொருவரின் மீதுள்ள கடமை யாதெனில், ஏக இறைவனுக்கு இணை வைத்து, இறை நிராகரிப்பென்னும் நெருப்பில் தங்களை சிக்கவைத்துக் கொண்டுள்ளவர்களைக் காப்பாற்றிட வேண்டுமே என்ற சிந்தனையிலும், கவலையிலும் சதா மூழ்கி இருக்கவேண்டும். வலியச்சென்று அவர்களுடன் உள்ளன்பு பாராட்டி அவர்களின் முகவாயில் கை வைத்து, அவர்களின் கால்களைப் பிடித்துக்கொண்டு, கெஞ்சியேனும் இந்த புனிதமான விஷயத்தை அவர்களுக்கு புரியவைக்க வேண்டும். ஏக இறைவனுக்கு இணைவைத்து தவறான வழியில் வாழ்ந்து உங்களின் ஈருலக நல்வாழ்வையும் பாழ்படுத்திக்கொண்டு விட வேண்டாம்! ஒரே இறைவனை விசுவாசம் கொண்டு ஈருலகமேன்மைகளையும் அடைந்து கொள்ளுங்கள் என்று மன்றாடி கெஞ்சிக் கேட்க வேண்டும்.

        எவ்வித ஆதாய நோக்கின்றி, உண்மையான அக்கறையுடன் சொல்லப்படும் உங்களின் இவ்வாறான பேச்சு, அவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்பது திண்ணம். உங்கள் மூலமாக ஒருவருக்கேனும் இந்த நேர்வழி கிடைத்து விட்டால், ஒருவரையேனும் எஜமானின் சத்திய வாசலில் கொண்டு வந்து சேர்ந்து விட்டால் நாம் நம்மீதுள்ள பொறுப்பை அவர்களிடம் சேர்த்து விட்டவர்களாக கருதப்படுவோம். நம்மீது கடமையாக்கப்பட இறைவனின் கட்டளை நம்மால் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அப்போது தான் நாம் மன அமைதிகொள்ள முடியும். ஒருவரை இறை நிராகரிப்பு மற்றும் இணை வைப்பிலிருந்து காப்பாற்றி, சத்தியப்பாதையில் அவரை நடைபயில செய்தவரின் மீது அல்லாஹ் மிகவும் மகிழ்வடைகிறான்.

          இதனை ஒரு உதாரணத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம் உங்களின் அன்பு மைந்தன் உங்களின் விரோதியாகி, உங்களின் எதிரியுடன் சேர்ந்து கொண்டு அவன் சொல்வதைக் கேட்டு தவறாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். ஒரு நல்லவர் அவனுக்கு அறிவுரைகளைச் சொல்லிப் புரியவைத்து உங்களுடன் இணக்கமாக ஆக்கிவிட்டால், அதற்கான முயற்சியில் ஈடுபட்ட அந்த நல்லவரின் மீது உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும்! அந்த நல்லவரின் மீது உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியை விட உண்மையான இறைவனை ஒருவருக்கு புரியவைத்து அவனை அறியவும் அவனது அன்பை அடைந்து கொள்ளவும் காரணமாக முயற்சித்த அடியாரின் மீது அல்லாஹ் அளவு கடந்து மகிழ்வு கொள்கிறான்.

ஈமான் – இறை விசுவாசத்தை ஏற்றுக்கொண்டபின்!

       இஸ்லாம் மார்க்கத்தை தழுவியபின், நீங்கள் இறைவனின் உண்மை அடியாராக ஆகிவிட்டீர்கள், இனி உங்கள் மீது தினமும் ஐவேளை தொழுவது கடமை. எனவே அதை நீங்கள் அதன் வழிமுறைகளைக் கற்றுப்பயின்று, தவறவிடாமல் தொழுதுவர வேண்டும். அதனால் உங்கள் ஆன்மா சாந்தியடைவதுடன் அல்லாஹ்வின் அன்பும் உங்கள் மீது சொரியும்.
ரமளான் மாதம் வந்துவிட்டால், அந்த மாதம் முழுவதும் நோன்பு பிடிக்க வேண்டும்.

        நீங்கள் பொருளாதார வசதி படைத்தவராயின் உங்களின் பொருளாதார நிலைக்கேற்ப மார்க்கம் நிர்ணயித்துள்ளபடி உங்கள் வருமானத்தின் இரண்டரை சதவிகிதத்தை ஒதுக்கி அதனைப் பெற்றுக்கொள்ள தகுதி உள்ளவர்களுக்கு பிரதி வருடமும் தானமாக அளித்துவர வேண்டும்.
வசதியிருப்பின் ஆயுளில் ஒரு தடவை ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

        ஜாக்கிரதை! இனி உங்களின் சிரசு அல்லாஹ்வைத் தவிர வேறு யாரின் முன்பும் வணக்கத்திற்காக பணிந்துவிடக்கூடாது. அனைத்து மனிதர்களையும் இறைவனின் அடியார்கள் என்ற ரீதியில் சமமானவர்களாக கருதவேண்டும். அதே நேரத்தில் அவரவர்கள் பெற்றிருக்கும் அந்தஸ்த்திற்கு ஏற்ப கண்ணியப்படுத்தும் முறையில் நடந்து கொள்வதும் நம்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. நாம் உலகிலுள்ள அனைத்து மக்களையும் நமக்கிடையில் ஒரே பெற்றோருக்கு பிறந்த சகோதரர்களாகவே கருத வேண்டும். வேற்றுமையின்றி பழகிடவும் பரிமாற்றங்கள் செய்திடவும் வேண்டும். மனமாற அனைவரையும் நேசிக்கவும் வேண்டும்.

       விபச்சாரம், மது அருந்துதல், சூதாடுதல், வட்டி வாங்குதல், பன்றி இறைச்சி புசித்தல், லஞ்சம் வாங்குதல் போன்ற பாவங்களில் ஈடுபடக்கூடாது.

        இன்னும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட அத்துணை பாவச் செயல்களை விட்டும், தவிர்த்திருக்க வேண்டும். மேலும் அல்லாஹ்வால், உத்தரவிடப்பட்ட அத்துணை நற்செயல்களையும் எடுத்து நடக்கவேண்டும். (ஹலால்) தூயது என்று அறிவிக்கப்பட்டவற்றை வீண்விரையமில்லாமல் தாராளமாக உண்ணலாம்... பருகலாம்... அதுபோன்றே அவைகளைப் பெறுவதற்கு நியாயமான வழிகளில் வியாபாரம், விவசாயம், பிற தொழில் துறைகளில் நேர்மையாக ஈடுபட வேண்டும்.

         உங்களின் எஜமானின் புறத்திலிருந்து வழங்கப்பட்ட பரிசுத்த வேதமான குர்ஆனை பொருள் அறிந்து அதை ஓதும் முறைகளையும் அறிந்து தினமும் ஓதி வரவேண்டும். மேலும் உடல் – உடை - இருப்பிட சுத்தம், ஆகியவற்றின் தூய்மையின் வழி வகைகளை நன்கு அறிந்து தெளிவு பெற்று அதனை கடைபிடித்து நடந்து கொள்ள வேண்டும்.

        உண்மை உணர்வுடனும், தூய்மையான மனதுடனும் எங்கள் இரட்சகா எங்களையும், எங்கள் நண்பர்களையும், குடும்பத்தார், உற்றார், உறவினர்களையும், இப்பூமியில் வாழும் மனிதகுலத்தவர் அனைவரையும், (ஈமான்) இறை விசுவாசத்துடன் உயிர் வாழச் செய்வாயாக. ஈமான், இறை விசுவாசத்துடன் மரணிக்கச் செய்வாயாக என்று உருக்கமாக பிரார்த்தித்து வர வேண்டும்.

      ஏனெனில் இறைவிசுவாசம் தான் மனித குலத்தின் முதன்மையும், இறுதியுமான வெற்றி வாழ்வுக்குறிய ஒரே வழியாகும். இறைத்தூதர் (ஆப்ரஹாம்) இப்ராஹீம்(அலை) அவர்கள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த குண்டத்தில் வீசியெறியப்பட்ட போது, தங்களின் ஒரு இறை நம்பிக்கையின் மூலமே காப்பாற்றப்பட்டார்கள். தகிக்கும் நெருப்பில் வீழ்ந்து இருந்தும் அவர்களின் ஒரு முடி கூட கருகிடவில்லை.

         இன்றும் கூட அந்த ஈமானிய சக்தி நம்மிடமிருந்தால் நெருப்புக்குண்டம் நமக்கும் பூஞ்சோலையாகிவிடும். சத்தியப் பாதைக்கு எதிராக உள்ள தடைகள் எல்லாம் தவிடு பொடியாகிவிடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

        “இன்றும் கூட இப்ராஹீமின் ஈமான்(உங்கள் உள்ளத்தில்) இருந்தால் நெருப்புக் குண்டம் கூட (உங்களுக்கு) பூஞ்சோலையாக மாறிவிடுமே” (அல்லாமா-இக்பால்)

இறை நம்பிக்கைக்கு வரும் சோதனை!

          இஸ்லாம் மற்றும் ஈமானை ஏற்றுக்கொண்டதன் காரணமாக உங்களுக்கு ஒருகால் இந்த பேருண்மையை அறியாதவர்களால் சோதனைகளும் ஏற்படலாம். எனினும் இறுதியான, நிரந்தரமான வெற்றி எப்போதும் சத்தியத்திற்கே! இவ்வுலகிலும், மறுஉலகிலும் சத்தியத்திற்கு மட்டுமே வெற்றி கிடைக்கும். இறப்புக்குப்பின் அழியா உலகில் மிகப்பெரிய வெற்றியும் பேரின்பமும் கிடைக்கும். இந்த உலக வாழ்வு என்பது மிக குருகிய காலமாகும். மரணத்திற்குப்பின் உள்ள வாழ்க்கை அழிவில்லாதது. நித்திய – நிரந்தரமானது. முடிவில்லாத அம்மறு உலகவாழ்கை முழுதும், சுவனத்தையும், அதன் சுகங்களையும் அடையப்பெற இருக்கிறோம். அங்கு நம் எஜமானனை திருப்திபடுத்துவதற்காக, அவனை நேருக்குநேர் மகிழ்வுடன் சந்திக்கும் பேரின்ப தரிசிப்பைப் பெறுவதற்காக, இந்த உலகியல் சோதனைகள் ஒருபொருட்டே அல்ல என்பதை மனதில் நிலைப்படுத்திக்கொள்ள வேண்டும். சோதனைகளை சகித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறான சோதனைகள் உங்களுக்கு ஏற்படாமல் இருக்கவும் ஏற்பட்டால் அதில் வெற்றிபெறவும் மனம் உருகி உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்.

முடிவுரை:

 என் அருமை சகோதர, சகோதரிகளே!

       இந்த சிறிய நூலை மன ஓர்மையுடன், ஒரு முறைக்கு இருமுறை கவனமாக படியுங்கள். தூய உள்ளத்துடனும், நேர்வழியை அறிந்து கொள்ள வேண்டும் என்ற தேட்டத்துடனும் படிக்க கேட்டுக்கொள்கிறோன். இதில் கூறப்பட்டுள்ள விஷயங்களை நடுநிலையுடன் (நின்று) ஆய்வு செய்து பாருங்கள். உங்களின் தெளிவான உள்ளத்தை கேட்டுப்பாருங்கள், அது நேர்வழிக்கான பதிலையும் வெளிச்சத்தையுமே பதிலாக உதிக்கச்செய்யும்.

        இந்த நேரிய பாதைக்கான வழிகாட்டல்கள் என்ற உங்களுக்கு சொந்தமான உடமையை இதுவரை உங்களிடம் முறைப்படி சமர்ப்பிக்கப்படாது இருந்துவந்த அக்கருஊலக்கருத்துக்களை உங்கள் சமூகத்தில் கலப்பற்ற நல்லெண்ணத்துடன், உங்களின் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு சமர்ப்பித்துள்ளேன். இதில் உங்களின் முந்தைய மார்க்கத்தையோ, இதுவரை நீங்கள் வணங்கி வந்த தெய்வங்களையோ இம்மியளவுக்கு கூட இழித்தோ-பழித்தோ நான் குறிப்பிடவில்லை. அவ்வாறு செயல்படக்கூடாது என்று குர்ஆன் மூலமாக ஏக இறைவனான அல்லாஹ் தடுத்து இருக்கிறான்(அல்குர்ஆன்-6:108)
      
      மேலும் மனித குலத்தைச் சேர்ந்த நம் அனைவருக்கும் சொந்தமான இவ்வுடமையை உங்களுக்கு முன் கருத்தாய்வு அடிப்படையிலே விளக்கப்பட்டிருக்கிறது. உலகாதாய பொருளாசை, பதவி ஆசைகளாக ஒரு சிரு துரும்பைக் கூட முன்நிலைப்படுத்தி இந்நூலின் மூலம் உங்களைக் கவர முயற்சிக்கப்படவில்லை. இறப்பிற்குப்பிந்திய வாழ்க்கையில் இணைவைப்பாளர்களுக்கு நரக நெருப்பின் வேதனை அளிக்கப்பட இருப்பதாக இந்த நூலில் நான் குறிப்பிட்டிருப்பது உங்களை பயமுறுத்தும் நோக்கத்தில் அல்ல. நமது ஏக இறைவனான அல்லாஹ் அகில உலகமக்களின் நேர்வழிக்காக அருளித்தந்த திருக்குர்ஆனின் பல நூறு இடங்களில் இணைவைப்பவர்களுக்கு நரக வேதனை அளிக்கப்படும் என்று உறுதிப்பட கூறியுள்ளதைத் தான் உங்களுக்கு அறிவுருத்தி விட வேண்டும் என்ற கடமை உணர்வுடன் நான் நினைவூட்டியுள்ளேன்.



            இதற்குப்பின் முடிவு செய்வது உங்களின் கையில் இருக்கிறது. ஏனெனில் இஸ்லாமில் வற்புறுத்தல் என்பது அறவே அனுமதிக்கப்படவில்லை(அல்குர்ஆன் 2:256) உலகமக்கள் அனைவரும் உண்மையான ஏக இறைவனை அறிந்து ஏற்றுக்கொண்டு நேர்வழியைப் பெறவும், மறுஉலக நற்பேருகள் அனைத்தையும் பெற்றுய்யவும் மனம் உருகி அந்த ஏக இறைவனான அல்லாஹ்வின் சமூகத்தில் துஆ(பிரார்த்தனை)செய்கிறேன். நம் அனைவரையும் அன்பாளனும், அருளாளனுமான அல்லாஹ் உண்மையான தனது நல் அடியார்களாக ஏற்றுக் கொள்வானாக. ஆமீன்...